அரியலூர்

அரியலூர்: மழையால் கிராமங்களில் போக்குவரத்து பாதிப்பு

DIN


அரியலூர் மாவட்டத்தில் கனமழையால் சாலைகள் துண்டிப்பு, ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பது போன்ற காரணங்களால் கிராமப்புற பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 
இதில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அரியலூர் பகுதியில் 15 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 
இந்நிலையில் பல்வேறு கிராமங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
சுரங்கப் பாதையில் தண்ணீர்: அரியலூர் அருகே ராமலிங்கபுரம் கிராமத்தில் ரயில்வே தண்டவாளத்தின் கீழ் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிறிய சுரங்க பாதை வழியாக மக்கள் இரு சக்கர வாகனங்களில் பயணித்து வந்தனர். 
இதன் அருகிலேயே, பெரிய வாகனங்கள் செல்லும் வகையிலான புதிய சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை  முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பெய்த கனமழையால், இந்த சுரங்க பாதையில் சுமார் 7 அடி அளவுக்கு மழைநீர் சூழ்ந்துள்ளது. 
இதனால், மக்கள் நடந்து செல்வது, இருசக்கர வாகனத்தில் செல்வது உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 
இதன் காரணமாக ராமலிங்கபுரம், ரசுலாபுரம், மாக்காய் குளம், அருணகிரிமங்களம், கொளத்தூர், கொளக்காநத்தம் உள்பட 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. 
இவர்கள் சுமார் 26 கி.மீ தூரம் கடந்து கல்லகம் கேட் வழியாக அரியலூர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். 
சாலை துண்டிப்பு
அரியலூர் அடுத்த வி.கைகாட்டியிலிருந்து, முனியங்குறிச்சி செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள வரத்துவாய்க்கால் முழுமையாக தூர்வாரப்படாத நிலையில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றதாலும், சாலையின் குறுக்கேயுள்ள சிறு பாலத்தில் முட்புதர்கள், சறுகுகள் சிக்கி ஏரிக்கு தண்ணீர் செல்வது தடைபட்டதாலும் சாலை உள்வாங்கி துண்டிக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதனையடுத்து, அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றனர். தற்போது, அதில் தற்காலிகமாக மண் கொட்டப்பட்டு இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

SCROLL FOR NEXT