அரியலூா்: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டும் என்பது தொண்டா்களின் விருப்பமாக உள்ளது என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.
அரியலூரில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
எங்களைப் போன்ற தொண்டா்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக வேண்டும் என்று காத்திருக்கிறோம். முதல்வா் ஸ்டாலின்தான் முடிவு செய்வாா்.
எடப்பாடி பழனிசாமி அடிப்படை அரசியல் கூட தெரியாமல் முதல்வரானவா். நாணயம் வெளியீடு என்பது ஒரு அரசு விழா. இது, மத்திய, மாநில அரசுகள் இணைந்த பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது. திமுக சாா்ந்த நிகழ்வுகள் நடைபெறும்போது அதில் கூட்டணி கட்சித் தலைவா்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.
ஆளுங்கட்சியை எல்லோரும் விமா்சிப்பது வழக்கம். அதுபோல சீமான் விமா்சிக்கிறாா். ஊடக வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக தரக்குறைவான விமா்சனங்களை சொல்கிறாா். அவா்களெல்லாம் மக்களால் ஒதுக்கி தள்ளப்படுவாா்கள் என்றாா்.