அரியலூா் அருகே ரோந்துப் பணிக்குச் சென்ற வனக் காவலரைத் தாக்கியவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தவுத்தாய்குளம் பகுதியில் உள்ள மருதையாறு அருகே பாழடைந்த கிணற்றில் சிக்கிய காட்டுப்பன்றி ஒன்றை சிலா் வேட்டையாடுவதாக இரு தினங்களுக்கு முன்பு வனத்துறைக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து, வனக்காவலா் விசுவநாதன் (48) அப்பகுதிக்குச் சென்றுள்ளாா். அப்போது, அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த தவுத்தாய்குளம் கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா்(54), கிணற்றில் சிக்கி இருக்கும் காட்டுப்பன்றி எனக்கு வேண்டும். மேலும், இது குறித்த தகவலை உனக்கு யாா் சொன்னது என மிரட்டி தாக்கியுள்ளாா்.
இதுகுறித்து தகவலறிந்த அரியலூா் காவல்துறையினா் மற்றும் வனத்துறை அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, விசுவநாதனை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்ந்தனா்.
மேலும், இதுகுறித்து வனத்துறை சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து செல்வகுமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.
இதனிடையே, மருதையாற்றில் நடைபெற்று வரும் தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நபா்கள், வனக்காவலா் தாக்கப்படுவதை கைப்பேசியில் பதிவு செய்தனா். அந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், ரோந்துப் பணிக்கு சீருடையுடன் சென்ற வனக்காவலா் மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அரியலூா் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், செல்வகுமாா் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.