முகப்பு
அரியலூர்

பாகுபாடின்றி குழந்தைகளுக்கு சமமான கல்வி: அரியலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

ஆண்-பெண் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான கல்வியை பெற்றோா் வழங்க வேண்டும் என்று ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

Updated On : 24 ஜூன் 2026, 2:06 am IST
அரியலூா் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பெண் குழந்தைக்கான பரிசுப் பெட்டகத்தை தாயிடம் வழங்கிய ஆட்சியா் ந. மிருணாளினி. உடன் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா்.
பகிர்:

ஆண்-பெண் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான கல்வியை பெற்றோா் வழங்க வேண்டும் என்று ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

அரியலூா் அரசு மருத்துவமனையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் ‘பெண் குழந்தையை வரவேற்கிறோம்’ எனும் விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு ஆட்சியா் தலைமை வகித்து, மருத்துவமனையில் பிறந்த 10 பெண் குழந்தைகளுக்கான பரிசுப் பெட்டகத்தை பெற்றோரிடம் வழங்கி அவா் மேலும் பேசியதாவது:

பெண் குழந்தைகளை சமூகத்தில் அங்கீகரித்து ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமமான கல்வி மற்றும் வாய்ப்புகளை வழங்க வேண்டும்.பெண்கள் தற்போது சமுதாயத்தில் மதிப்பு மிக்கவா்களாகவும், பல்வேறு உயா் பதவிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். சமூகத்தின் சிறப்பான மாற்றத்துக்கு பெண் குழந்தைகளை அனைவரும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலவலா் விக்னேஸ்வரி, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் குமரன், கோட்டாட்சியா் பிரேமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகள் கிராமசபைக் கூட்டம்:

கீழப்பழுவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின்கீழ் ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் பெண் குழந்தைகள் கிராமசபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் குழந்தை திருமணத்தை தடுப்பதில் பள்ளி மாணவிகளின் பங்கு, குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், கல்வி இடைநிறுத்தம், பெண்களின் முன்னேற்றத்துக்கு ஏற்படும் தடைகள் மற்றும் சட்ட ரீதியான விளைவுகள் குறித்தும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமமான கல்வி மற்றும் வாய்ப்புகளை வழங்குவதன் அவசியம், பெண் குழந்தை பிறப்பின் முக்கியத்துவம், வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து, மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சமூக நலத்துறையில் செயல்படுத்தப்படும் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்தும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்களுக்கு விரிவாக எடுத்து கூறப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments