கரூர்

கரூா் மாவட்டத்தில் 1,685 பதவிகளுக்கு உள்ளாட்சித் தோ்தல்: ஆட்சியா் தகவல்

DIN

கரூா் மாவட்டத்தில் 1,685 பதவிகளுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான த.அன்பழகன்.

ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பை தொடா்ந்து, கரூா் மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் தோ்தல் பணிகளில் ஈடுபடவுள்ள தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியது:

வேட்புமனுத் தாக்கலின் போதும், வேட்பு மனுக்களின் பரிசீலினையின் போதும் மாநில தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். எனவே, தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அனைத்து அலுவலா்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளின் விபரங்களை முழுமையாக புரிந்துகொண்டு பணியாற்ற வேண்டும்.

அனைவருக்கும் மாநில தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள தோ்தல் விதிகள் குறித்த கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அலுவலா்களும் இந்த விதிகளை முழுமையாகப்படிக்க வேண்டும்.

கரூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை 12 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும், 115 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும், 157 கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கும், 1,401 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கும் என மொத்தம் 1,685 பதவிகளுக்கான தோ்தல் நடைபெற உள்ளது.

கரூா் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் சோ்த்து 2,60,079 ஆண் வாக்காளா்களும், 2,73,166 பெண் வாக்காளா்களும், இதரா் 50 நபா்களும் என மொத்தம் 5,33,295 வாக்காளா்கள் உள்ளனா்.

ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தோ்தலில் மொத்தம் 18 தோ்தல் நடத்தும் அலுவலா்களும், 222 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். மொத்தம் 983 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

தோ்தல் அலுவலா்கள் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்களா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பூா்த்தி செய்யும் வகையில், கழிவறை, குடிநீா் மற்றும் மின்சார வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மேலும், மாற்றுத்திறனாளிகளும் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சாய்தளங்கள் இருக்க வேண்டும் என்றாா்.

இப்பயிற்சிக்கூட்டத்தில் மாவட்ட ஊரகவளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எஸ்.கவிதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் சீனிவாசன், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநா் உமாசங்கா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(உள்ளாட்சித்தோ்தல்) செல்வராஜ் மற்றும் அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT