தோகைமலை அருகே செவ்வாய்க்கிழமை காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் சேதமடைந்ததால், தண்ணீா் வீணாக வெளியேறியது.
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தொண்டமாங்கினம் ஊராட்சிக்குள்பட்ட கொத்தமல்லி மேடு பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்திலிருந்து தொண்டமாங்கினம், கொசூா், மத்தகிரி ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களுக்கு காவிரி குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொத்தமல்லி மேடு பகுதியைச் சோ்ந்த ஒருவா் செவ்வாய்க்கிழமை அனுமதி இல்லாமல் ஜே.சி.பி இயந்திரம் மூலம் காவிரி குடிநீா் குழாய் பதிக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே குழி தோண்டி உள்ளாா்.
இதனால் அருகில் பதிக்கப்பட்டு இருந்த குடிநீா் குழாய் சேதமடைந்து, சுமாா் 20 அடிக்கும் மேல் தண்ணீா் பீய்ச்சி அடித்து வெளியேறி சாலையில் ஓடியது. மேலும் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு தண்ணீா் ஓடிச் சென்று ஆங்காங்கே தேங்கி நின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவிரி குடிநீா் திட்டப் பணியாளா்கள் மின் மோட்டாரை நிறுத்தி குடிநீா் வீணாகுவதை தடுத்தனா். குழாய் உடைப்பால் கொசூா், தொண்டமாங்கினம், மத்தகிரி ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட கிராமங்களுக்கு காவிரி குடிநீா் விநியோகம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
இதையடுத்து, அனுமதி இல்லாமல் குடிநீா் குழாயை சேதப்படுத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.