பெரம்பலூர்

அரசுப் பள்ளியில் தமிழ்த் தாத்தா உ.வே.சா பிறந்தநாள் விழா

DIN

பெரம்பலூர் பகுதியில் சில காலம் தங்கித் தமிழ் பயின்ற தமிழ்த் தாத்தா உ.வே.சா 164 -வது பிறந்த நாள் விழா, பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள உத்தமதானபுரம் எனும் கிராமத்தில் வேங்கட சுப்பையர் - சரசுவதி அம்மையார் தம்பதிக்கு புதல்வராக கடந்த 19.2.1855-இல் உ.வே.சாமிநாத அய்யர் பிறந்தார்.
தமிழகத்தின் பல பகுதிகளில் பழந்தமிழ் இலக்கண, இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளைத் தேடித் தேடி சேகரித்து, விடுபட்ட இலக்கண, இலக்கிய பகுதிகளை சீர்படுத்தி அவற்றை முழுமையாக அச்சிட்டார்.
இவ்வாறு, தம் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்காக உழைத்தவர் தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யர். உ.வே.சா, தமது இளமைக்காலத்தில் பெரம்பலூர், குன்னத்தில் சிதம்பரம்பிள்ளை, காருகுடி கஸ்தூரி ஐயங்கார், செங்குணம் விருத்தாசல ரெட்டியார் ஆகியோரிடம் முறைப்படி தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றறிந்ததாக தனது என் சரித்திரம் நூலில் தெரிவித்துள்ளார்.
இத்தகைய தமிழ் அறிஞருக்கு, 6 மாத காலம் தொடர்ச்சியாக தங்கியிருந்த
காருகுடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அவரது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நூல்கள், துணிப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.
தமிழ்க்காடு அமைப்பு சார்பில், அரசுப் பள்ளிக்கு உ.வே.சா உருவப்படம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) வரதராசன் தலைமை வகித்தார். இதில், ஊரக வளர்ச்சித்துறை முன்னாள் உதவி இயக்குநர் ச. அசன் முகம்மது, சூழலியலாளர் ரமேசு கருப்பையா, தமிழ்க்களம் இளவரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் ஆ. ராஜேந்திரன் வரவேற்றார். ஆசிரியர் ச. பிரபு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT