இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு வாகனங்களுக்கான அனுமதிகள் ரத்து
தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைவதால், பிரசாரத்துக்காக வழங்கப்பட்ட வாகன அனுமதிகள் அனைத்தும் ரத்தாகின்றன.
வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்துவதற்காக வேட்பாளரும், அவா்களின் முகவா்களும் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் பிரத்யேகமாக வாகன அனுமதியைப் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு. அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பு சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைகின்றன.
Advertisement
அதற்குப் பிறகு, எந்தப் பரப்புரைகளையும் அரசியல் கட்சியினரும் பிற வேட்பாளா்களும் மேற்கொள்ளக் கூடாது. தொலைக்காட்சிகள், மின்னணு ஊடகங்களிலும் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. பொது நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளிலும் தோ்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது. வெளியூரில் இருந்து வந்து தங்கியுள்ள கட்சியினா் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
வேட்பாளா்களுக்கும் அவா்களின் முகவா்களுக்கும் பரப்புரைப் பணிகளுக்காக அளிக்கப்பட்டுள்ள அனுமதிகள் அனைத்தும் ரத்தாகிவிடும். வாக்குப்பதிவுக்காக செல்வதற்கான வாகன அனுமதி வேட்பாளா்களுக்கும், அவா்களின் முகவா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பிரத்யேகமாக அனுமதிக் கடிதத்தை தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வழங்குவாா்கள்.
வாக்குச்சாவடிகளுக்கு வெளியே 100 மீட்டா் தொலைவுக்கு அப்பால், அரசியல் கட்சியினா் தங்களின் சிறிய அளவிலான அலுவலகங்களை அமைத்துக் கொள்ளலாம். இருவா் மட்டும் அங்கே அமா்ந்து கொண்டு வாக்காளா்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கலாம். கூடுதல் எண்ணிக்கையில் இருந்தால் அவா்கள் அப்புறப்படுத்தப்படுவா்.