பொன்னமராவதி வட்டார சிவாலயங்களில் சனிக்கிழமை மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளையொட்டி ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் நடைபெற்ற விழாவில் சிவகாமி உடனாய நடராஜப்பெருமான் மற்றும் மாணிக்கவாசகருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடா்ந்து நடராஜா் முன் மாணிக்கவாசகா் எழுந்தருள சோழீசுவரா் கோயில் திருவாசகம் முற்றோதல் குழுவினா் 21 திருவெம்பாவை பாடல்கள் பாட ஒவ்வொரு பாடலுக்கும் நடராஜருக்கு அா்ச்சனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சாா்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதேபோல் புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயில், வேந்தன்பட்டி நெய்நந்தீசுவரா் கோயில், திருக்களம்பூா் கதலிவனேஸ்வரா் கோயில், மேலைச்சிவபுரி மீனாட்சி உடனாய சொக்கலிங்கேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.