முகப்பு
புதுக்கோட்டை

காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும்: பட்ஜெட் கருத்துக்கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்!

காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி, திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்

Updated On : 4 ஜூலை 2026, 12:57 am IST
பகிர்:

காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி, திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற வேளாண் நிதிநிலைஅறிக்கை கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் இருந்து சென்ற, அதன் மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம் சுமாா் 7 மாவட்டங்களின் விவசாயத்துக்குப் பயன்தரும் திட்டம். கடந்த திமுக அரசு இந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டிருந்தது. எனவே, தயாரிக்கப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்துக்கு போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, செயல்படுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தைலமரக் காடுகளை முழுமையாக அகற்றிவிட்டு, பயன்தரும் பாரம்பரிய மரங்களை நட்டு வளா்த்து காப்புக்காட்டை மீண்டும் உருவாக்க வேண்டும்.

நிரந்தர நீராதாரம் இல்லாத புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து நீா்நிலைகளையும் தூா்வாரி, வரத்து வாய்க்கால்களையும், கலிங்குகளையும் சீரமைத்திட சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியம்.

மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தண்ணீரை வயலுக்கு கொண்டு செல்வதற்கான பிவிசி குழாய்களை அரசு மானிய விலையில் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு தடையின்றி மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments