தஞ்சாவூர்

புயல் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்: து. ராஜா

DIN

தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான து. ராஜா.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை மாலை அவர் தெரிவித்தது:
கஜா புயலால் தமிழகத்தில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன. இந்தப் பாதிப்பைத் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். ஆனால், இதைச் செய்ய மத்திய அரசு முன் வரவில்லை.
வரலாறு காணாத அளவுக்குப் பேரழிவு ஏற்பட்டுள்ளதைப் பார்வையிட பிரதமர் வராதது குறித்து மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். இதேபோல, தமிழக முதல்வரும் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லவில்லை என மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் தங்களது வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்ளப் போராடுகின்றனர். இவர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று செயல்படும்.
தென்னைக்கு ரூ. 20,000 வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், நிவாரணம், அப்புறப்படுத்துதல், புதிய கன்றுகள் வைத்தல் ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ. 1,512 மட்டுமே தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, மக்களின் துயரத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது.
நிவாரணப் பணிகளில் தமிழக அரசின் நிர்வாகம் முழுமையாக முடுக்கிவிடப்படாமல் உள்ளது. மின் வாரியப் பணியாளர்கள் மிகுந்த சிரமத்துடன் பணியாற்றுகின்றனர். ஆனால், வருவாய்த் துறையினர் கணக்கெடுப்புப் பணியைச் சரியாகச் செய்யவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மாநில அரசின் நடவடிக்கை போதுமான அளவில் இல்லை.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினத்தில் விசைப் படகுகள் கடுமையாகச் சேதமடைந்து நீரில் மூழ்கிவிட்டன. எனவே, புதிய படகு வாங்குவதற்கு ரூ. 30 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை தேவைப்படும் என மீனவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், தமிழக அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. இதேபோல, சேதமடைந்த நாட்டுப் படகுக்கும் ரூ. 15,000 நிவாரணம் அறிவித்து, மீனவர்கள் சந்தித்துள்ள இழப்பைக் கொச்சைப்படுத்துகிறது.
எனவே, மக்கள் அடைந்துள்ள துயரங்கள், பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் வருகிற குளிர்காலக் கூட்டத் தொடரில் குரல் எழுப்புவேன். மேலும், இதைத் தேசியப் பேரிடர் என்பதைப் புரிய வைத்து, உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவேன் என்றார் ராஜா.
அப்போது மாநிலக் குழு உறுப்பினர் இரா. திருஞானம், மாவட்டச் செயலர் மு.அ. பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, பேராவூரணி, பட்டுக்கோட்டை வட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராஜா பார்வையிட்டு, மக்களிடம் ஆறுதல் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT