முகப்பு
தஞ்சாவூர்

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு கூடாது: சமூக நீதி மாநாட்டில்  வலியுறுத்தல்

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய அனைத்து சமூக அமைப்புகளும் ஓரணியில்

Updated On : 25 பிப்ரவரி 2019, 9:01 am IST
பகிர்:

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய அனைத்து சமூக அமைப்புகளும் ஓரணியில் நின்று போராட வேண்டும் என தஞ்சாவூரில்  நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தஞ்சாவூர் திலகர் திடலில் திராவிடர் கழக மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.  இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்குக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல, மத்திய அரசிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். 
அரசமைப்புச் சட்டம் சமூக ரீதியாக, கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உரிமை தந்துள்ளது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எந்தப் பிரிவும் இல்லை.  வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் (மண்டல் வழக்கு) உச்ச நீதிமன்றம் கிரீமிலேயர் என்ற முறையைப் புகுத்தியது. இதனால், பிற்படுத்தப்பட்டோரில் தகுதி படைத்த பலரும் இட ஒதுக்கீடு உரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, பொருளாதார அளவுகோலைப் புகுத்தும் கிரிமிலேயர் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.
உயர் ஜாதியினரில் பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்ற அரசியல் சட்டத் திருத்தத்தை இரு நாட்களில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மத்திய அரசு நிறைவேற்றியது. அவசர, அவசரமாகக் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று, மத்திய அரசிதழிலும் வெளியிட்டு, அமலுக்கு வந்துள்ளது.
பொருளாதார அளவுகோலை இப்போது உள்ளே திணித்தால், அடுத்து தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலும் பொருளாதாரத்தை மட்டுமே அளவுகோலாக்கி சட்டம் இயற்றும் ஆபத்து இருக்கிறது. எனவே, சமூக நீதியைக் குழி தோண்டி புதைக்கும் மத்திய பாஜக அரசின் உயர் ஜாதியினருக்கான பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய அனைத்து சமூக அமைப்புகளும் ஓரணியில் நின்று?போராட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் திறந்து வைத்தார். 
மேலும் அம்பேத்கர், அண்ணா, காமராசர், கருணாநிதி ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டன. 
இதில், கர்நாடக மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் எச். காந்தராஜா, ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா. அதியமான், இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் எஸ்றா. சற்குணம், பேராசிரியர் ப. காளிமுத்து உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.