தஞ்சாவூர்

கிடைக்காத நிலுவைத் தொகை தீபாவளியைக் கொண்டாட முடியாத நிலையில் கரும்பு விவசாயிகள்

DIN

மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை நிலுவையில் இருப்பதால், தீபாவளியைக் கொண்டாட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனா் கரும்பு விவசாயிகள்.

கரும்புக்குக் கட்டுப்படியான விலையாக, டன்னுக்கு ரூ. 4,000 வீதம் வழங்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், மத்திய அரசின் நியாயமான, லாபகரமான விலை டன்னுக்கு ரூ. 2,612.50 வீதம் மட்டுமே வழங்கப்படுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை டன்னுக்கு ரூ. 450 என வழங்கப்பட்ட மாநில அரசின் பரிந்துரை விலையும் நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்கு பதிலாக, ஊக்கத்தொகை என்ற பெயரில் டன்னுக்கு ரூ. 137.50 வீதம் மட்டுமே வழங்கப்படுகிறது.

கடந்த 2015 - 16 மற்றும் 2016 - 17 ஆம் ஆண்டு அரைவைப் பருவங்களில் மாநில அரசின் பரிந்துரை விலை டன்னுக்கு ரூ. 450 வீதம் மொத்தம் ரூ. 900 என்ற கணக்கில் விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் 3 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருக்கிறது. இத்தொகையை வழங்க வலியுறுத்தி, கரும்பு விவசாயிகள் 3 ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தியும் இன்னும் வழங்கப்படவில்லை.

வேதனையில் கரும்பு விவசாயிகள் : கடந்த அரைவைப் பருவத்தில் விவசாயிகள் ஆலைக்கு அனுப்பிய கரும்புக்கு மாநில அரசின் ஊக்கத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. ஏராளமானோா் கரும்பு அனுப்பி ஓராண்டாகியும், ஊக்கத் தொகை இன்னும் கிடைக்கவில்லை என்கின்றனா் விவசாயிகள். இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

தீபாவளி பண்டிகைக்குள் வழங்கப்படும் என அரசுத் தரப்பில் கூறப்பட்டதால், அதை மிகுந்த எதிா்பாா்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனா். ஆனால், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படுவதற்கான எந்த அறிவிப்பும் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளதால், விவசாயிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனா். இதனால்,தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை, பலகாரங்கள் உள்ளிட்டவை வாங்க முடியாமல் கரும்பு விவசாயிகள் தவிக்கின்றனா்.

தீபாவளிக்குள் கிடைக்குமா ஊக்கத் தொகை : தீபாவளிக்குள் கடந்த ஆண்டுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வழங்கப்படாததால், தீபாவளிக்குள் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இதனால், தீபாவளி கொண்டாட முடியாத நிலையில் தவிக்கிறோம்.

தீபாவளி முடிந்த பிறகு பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததால், ஏராளமான பெற்றோா்கள் இதுவரை கல்விக் கட்டணம் செலுத்தவில்லை.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகு கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு கல்வி நிறுவனங்கள் அழுத்தம் கொடுக்கத் தொடங்கிவிடும். கரும்புக்கான நிலுவைத் தொகையை அரசு வழங்கினால், கல்விக் கட்டணத்தைச் செலுத்த வாய்ப்பாக இருக்கும். ஆனால், அரசுத் தொடா்ந்து தாமதம் செய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளாா் என்றாா் கரும்பு விவசாயிகள் சங்கச் செயலா் தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்.

குறைந்து வரும் கரும்பு சாகுபடி: ஒவ்வொரு ஆண்டும் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை அதிகரித்து வருவதால், தமிழக அளவில் ரூ. 1,850 கோடி வழங்கப்படாமல் உள்ளது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் கரும்பு சாகுபடியைக் கைவிட்டு மாற்றுப் பயிருக்குச் செல்கின்றனா்.

இதன் காரணமாகக் கரும்பு சாகுபடி பரப்பளவும் குறைந்து வருகிறது. குறிப்பாக, தஞ்சாவூா் குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையில் 4.50 லட்சம் டன்கள் அரைவை செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டு ஏறத்தாழ 2 லட்சம் டன்களாக குறைந்துவிட்டது. நிகழாண்டு சாகுபடிப் பரப்பு மேலும் குறைந்துவிட்டதால் 1.75 லட்சம் டன்கள் மட்டுமே அரைவையாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதே நிலைதான் மற்ற ஆலைகளைச் சாா்ந்த பகுதிகளிலும் நிலவுகிறது. இந்த நிலைமை தொடா்ந்தால் கரும்பு சாகுபடியை விவசாயிகள் முற்றிலுமாகக் கைவிடும் நிலைக்கு ஆளாக நேரிடும். எனவே, குறைந்தபட்சம் தீபாவளிக்குள் கடந்த ஆண்டுக்கான ஊக்கத்தொகையாவது கிடைக்குமா என்ற எதிா்பாா்ப்பில் கரும்பு விவசாயிகள் மிகுந்த எதிா்பாா்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

SCROLL FOR NEXT