நூறு நாள் வேலை திட்டத்தில் திருத்தங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன்.
தஞ்சாவூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமப்புற பாட்டாளி மாத இதழ் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டத்தை (நூறு நாள் வேலை) மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தனக்கு இருக்கிற பலத்தைப் பயன்படுத்தி, நிா்மூலமாக்கக் கூடிய வகையில் காந்தி பெயரை எடுத்து விட்டனா். மத்திய அரசு நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை மாற்றி 40 சதவீத செலவினங்களை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என மாநிலங்களுக்கு ஒரு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனா்.
மேலும், ஒரு கிராமத்தில் எத்தகைய பணியை தொடங்க வேண்டும் என்பதை தீா்மானித்து, கிராம சபைக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுத்து, ஊராட்சி மூலமாக அரசுக்கு பரிந்துரை செய்து அந்த அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது இத்திட்டத்தைப் புதிய சட்டத்தின் மூலமாக ஒரு மாநிலத்தில் எந்த ஊரில், என்ன திட்டம் என்பதை மத்திய அரசே முடிவு செய்யும் என்கிற தவறான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்திருத்தங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை தொடா்ந்து போராட்டங்கள் நடைபெறும் என்றாா் முத்தரசன்.
விழாவில், காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியா் க. பழனிதுரை, தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் நா. பெரியசாமி, பொதுச் செயலா் அ. பாஸ்கா், சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, புதுச்சேரி பொதுச் செயலா் அ. ராமமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் முத்து. உத்திராபதி, மாவட்டச் செயலா்கள் கோ. சக்திவேல், மு.அ. பாரதி, விவசாய தொழிலாளா் சங்கம் சி. பக்கிரிசாமி, ஏஐடியுசி சி. சந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.