மணப்பாறை நல்லாண்டவர் கோயிலில் உறியடி திருவிழா
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஸ்ரீ நல்லாண்டவர் கோயிலில் கோகுலாஷ்டமி உறியடி திருவிழா, திருக்கல்யாண உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஸ்ரீ நல்லாண்டவர் கோயிலில் கோகுலாஷ்டமி உறியடி திருவிழா, திருக்கல்யாண உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் உற்சவ மூர்த்தி கிருஷ்ணர் கோயிலில் இருந்து கருட வாகனத்தில் புறப்பட்டு கோயிலின் முன்பிருந்த உறியடி தோரண வாயிலை அடைந்து, கிராம மக்கள் மத்தியில் உறியடிக்கும் நிகழ்வு நடைபெற்றது. மக்கள் தண்ணீரை வாரி இறைக்க, அதையும் மீறி உறியடித்து, அருகிலிருந்த வழுக்கு மரத்தில் ஏறி பணமுடிப்பை எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் அப்பகுதி இளைஞர்கள் பங்கேற்று வழுக்கு மரமேறி பண முடிப்பை எடுத்தனர். கிருஷ்ணர் நகர் வலம் வந்து கோயிலை அடைந்தார்.
தொடர்ந்து பாமா, ருக்மணி திருக்கல்யாணம் கொலு மண்டபத்தில் நடைபெற்றது. கிருஷ்ணரும், பாமா, ருக்மணியும் மாலை மாற்றி கொண்டனர். பொதுமக்கள் ஆசீர்வதித்து அளித்த திருமாங்கல்யம் பாமா, ருக்குமணிக்கு சாற்றப்பட்டது. பின்னர் தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் அப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் வே. பிரபாகர், பரம்பரை அறங்காவலர் முத்துவீரலக்கப்ப நாயக்கர் ஆகியோர் செய்தனர்.