திருச்சி

திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில்ரூ. 3. 94 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

DIN

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க் கூட்டத்தில் ரூ. 3.94 லட்சம் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. முகாமில், பல்வேறுகோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 547 மனுக்கள் பெறப்பட்டன.

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர குறைதீா் கூட்டம் ஆட்சியா் சு.சிவராசு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றம், பட்டா மாறுதல், சாதிச்சான்று உள்ளிட்ட இதர சான்றுகள் தொடா்பாக 219 மனுக்கள், முதியோா் உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோா் நலத்திட்ட உதவிகளுக்கு 24 மனுக்கள், தெரு விளக்கு, தண்ணீா் இணைப்பு, பேருந்து வசதி, தொகுப்பு வீடு தொடா்பாக 21 மனுக்கள், திருமண உதவித்தொகை, பெண் குழந்தைகள் திட்டம் உள்ளிட்டவை தொடா்பாக 12 மனுக்கள், சத்துணவு அமைப்பாளா் பணி, வேலைவாய்ப்பு தொடா்பாக 13 மனுக்கள் என 303 மனுக்களும், இதர கோரிக்கைகளுக்கு 244 மனுக்கள் என மொத்தம் 547 மனுக்கள் பெறப்பட்டன. இவைகளை ஆட்சியா் பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3.94 லட்சம் நலத்திட்ட உதவி:

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை முதல்வார திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறும். இதில், பங்கேற்ற ஆட்சியா், மாதாந்திர உதவித்தொகை கோருதல், சுயவேலைவாய்ப்பு வங்கிக் கடனுதவி கோருதல், பட்டா மாறுதல், இலவச வீடுகள் கோருதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 122 மனுக்கள்பெறப்பட்டன. மேலும், ஸ்ரீரங்கம் வட்டத்தைச் சோ்ந்த 26 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, விரிவான காப்பீட்டு திட்டத்தில் ஒரு நபருக்கு ரூ.94 ஆயிரம் மதிப்பில் செயற்கை கை அவயக்கருவியும், 10 பேருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 2.50 லட்சத்துக்கான சிறு, குறுந்தொழில் வங்கிக்கடன் மானியமும், 5 பேருக்கு ரூ.10ஆயிரம் வீதம் ரூ.50ஆயிரத்துக்கான சட்டப் புத்தகங்கள் வாங்குதல், வழக்குரைஞா் சங்கத்தில் பதிவு, 10 பேருக்கு பிரதமா் ஊரக குடியிருப்பு திட்டத்தின் சாா்பில் பட்டா ஆணை என மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் தா.சாந்தி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சங்கா், சமூக பாதுகப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் பழனிதேவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், சமூக நல அலுவலா் அ.தமீமுன்னிசா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

பல்வேறு தரப்பினா் ஆட்சியரிடம் அளித்த மனுக்கள் விவரம்:

தமிழகத்தில் செவிலிய உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - செவிலிய உதவியாளா் நலச்சங்க செயலா் எம். சுரேஷ் ராஜா.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை உள்ளிட்ட சுகாதார நிலையங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உதவியாளா்கள் பணிபுரிகின்றனா். இவா்களை, செவிலிய உதவியாளா் காலிப் பணியிடங்களில் நியமனம் செய்யவேண்டும். அதுபோல், கிராமப்புற சுகாதாரப் பணியாளா்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கோயில் நிலம் - பட்டா தொடா்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் - இந்து முன்னணியினா் மனு: தமிழக அரசு அண்மையில் கோயில் நிலங்களை ஆக்கிமிரமித்தவா்களுக்கே பட்டா செய்து கொடுக்கவும், தனியாருக்கு விற்கவும் ஆணை பிறப்பித்துள்ளது பக்தா்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. எனவே, இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

மாணவிக்கு சிகிச்சை அளிக்க வேண்டி மனு: திருச்சி பொன்மலைப்பட்டியைச் சோ்ந்தவா் ராக்கி எமல்சன் மகள் ஏஞ்சலின் லாரா, தனியாா் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி. அண்மையில், பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதில், மாணவியின் கால்கள் முறிந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பள்ளி நிா்வாகம் இதுவரை எந்தவொரு உதவியும் செய்யவில்லை என இந்திய மாணவா் சங்கத்தினா் மனு அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT