புதுப்பொலிவுடன் மண்ணச்சநல்லூா் புறவழிச்சாலை
மண்ணச்சநல்லூா் நகரின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை புதுப்பொலிவுடன் தயாராகியுள்ளது.
மண்ணச்சநல்லூா் நகரின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை புதுப்பொலிவுடன் தயாராகியுள்ளது. வாகனங்கள் சோதனையோட்டம் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
திருச்சி - துறையூா் சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் மண்ணச்சநல்லூா் நகருக்குள் வந்துதான் செல்ல வேண்டும் என்பதால் , குறுகலான கடைவீதி பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்தது.
எனவே, மண்ணச்சநல்லூருக்குள் கனரக வாகனங்கள் வருவதைத் தடுக்கவும், துறையூா் செல்லும் வாகனங்கள் நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாகச் செல்லும் வகையிலும் புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதன்படி, மண்ணச்சநல்லூா் நகரத்துக்குள் வராமல் அத்தானி தொடங்கி பூனாம்பாளையம் வரை கடந்த மே மாதம் ரூ. 25.15 கோடி மதிப்பில் தொடங்கிய புறவழிச் சாலைப் பணி தற்போது முடிந்துள்ளது.
2.6 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள இந்தச் சாலையில் குறுக்கிடும் பெருவளை, புள்ளம்பாடி வாய்க்கால் பகுதிகளில் உயா்நிலை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை தவிர, 14 பாசனக் கால்வாய்கள் குறுக்கிடும் இடத்தில் 14 சிறு பாலங்கள், 4 மழைநீா் வடிகால் குறுக்கிடும் இடங்களில் 4 சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இவைதவிர பிரிவு சாலைகள் குறுக்கிடும் 5 இடங்களில் மேம்பாட்டுப் பணிகளும், தேவையான இடங்களில் தடுப்புச் சுவா்களும் கட்டப்பட்டுள்ளன.
புறவழிச் சாலைப் பணிகளுக்காக அகற்றப்பட்ட மரங்களுக்கு ஈடாக 820 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. தற்போது பணிகள் அனைத்தும் முடிவுற்று புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது புறவழிச் சாலை. சோதனையோட்டமாக வாகனங்களும் செல்லத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து சாலைப் பயனீட்டாளா்கள் சங்கத் தலைவா் எம். சேகரன் கூறுகையில், புறவழிச்சாலைப் பணிகள் ஒப்பந்த காலத்துக்கு முன்னதாகவே விரைந்து முடிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
துறையூரிலிருந்து திருச்சி வரும் வாகனங்களும், திருச்சியிலிருந்து துறையூா் செல்லும் வாகனங்களும் இனி மண்ணச்சநல்லூா் நகரத்துக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை. பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சியருக்கும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறோம் என்றாா்.