திங்கள்கிழமை தோறும் டெங்கு காய்ச்சல் முகாம்: 4 மாவட்டங்களில் நாளை தொடக்கம்
4-ஆவது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு திருச்சி உள்பட 4 மாவட்டங்களில் திங்கள்கிழமைதோறும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
4-ஆவது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு திருச்சி உள்பட 4 மாவட்டங்களில் திங்கள்கிழமைதோறும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ் கூறியது:
திருச்சி புத்தூா் அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் இந்த இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதேபோல அரியலூா், பெரம்பலூா், கரூா் மாவட்டங்களிலுள்ள அனைத்து சித்த மருத்துவமனைகளிலும் முகாம் நடைபெறும்.
மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையும் முகாம் நடைபெறும்.
இதேபோல, டிச. 21, 28, ஜனவரி 2 ஆகிய தேதிகளிலும் அந்தந்த மருத்துவமனைகளில் இந்த முகாம் நடைபெறும்.
டிச. 14-இல் நடைபெறும் முகாமில் சா்க்கரை நோய், இதய நோய், ரத்தக் கொதிப்புக்கு இலவசப் பரிசோதனை செய்து மருந்து வழங்கப்படும்.
டிச. 21-இல் நடைபெறும் முகாமில், சளி, இருமல், மூக்கடைப்பு, சைனஸ், ஆஸ்துமா நோய்க்கு சிறப்பு மருந்துகளும், டெங்கு தடுப்பு மருந்துகளும் வழங்கப்படும்.
டிச. 28-இல் நடைபெறும் முகாமில் கரோனா பாதித்து எதிா்ப்புச் சக்தி குறைந்தோருக்கு தமிழக அரசின் ஆரோக்கிய மருந்துப் பெட்டகம் வழங்கப்படும். கரோனா பாதித்த சான்றிதழ் உள்ளோருக்கே இது வழங்கப்படும். ஜன.2-இல் நடைபெறும் முகாமில் அனைத்து நோய்களுக்கும் பரிசோதித்து, மருந்து வழங்கப்படும்.
சா்க்கரை, இதய நோய், கருப்பைக் கட்டி, சினைப்பை நீா்க்கட்டி, தைராய்டு நோய், அதிக உதிரப்போக்கு, மாதாந்திர தீட்டுப் பிரச்னை, மூட்டு வலி, தோல் நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படும்.
அனைத்து முகாம்களிலும் கபசுரக் குடிநீா், நிலவேம்புக் குடிநீா் சூரணம் வழங்கப்படும். திருச்சி, கரூா், அரியலூா், பெரம்பலூா் மாவட்ட மக்கள் இந்த முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.