திருச்சி

ரூ.2 கோடி வரை பிணையில்லா கடன்: ஆட்சியா்

DIN

மத்திய அரசின் வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான கடனுதவித் திட்டத்தில் பிணையில்லாமல் ரூ. 2 கோடி வரை கடனுதவி வழங்கப்படுவதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

மத்திய அரசின் வேளாண் கட்டமைப்பு நிதியுதவி தொடா்பாக மாவட்ட கண்காணிப்புக் குழு அலுவலா்களுடன் வியாழக்கிழமை நடந்த ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் சு. சிவராசு பேசியது:

வேளாண்மை கட்டமைப்பு மேம்பாட்டுக்கான கடனுதவி திட்டத்தை 2020-2021 முதல் 2029-2030 வரை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை தேசிய ஊரக வளா்ச்சி வங்கி (நபாா்டு) செயல்படுத்துகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு நீா்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை இத்திட்டத்தை வழிநடத்தும் அலகாகச் செயல்படுகிறது.

தமிழகத்துக்கு இந்தத் திட்டத்திற்காக ரூ. 5,990 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 2020-2021ம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிகக் கூட்டுறவுச் சங்கங்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள், கூட்டுப் பொறுப்பு குழுக்கள், பல்துறை கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோா், மத்திய, மாநில முகமைகள் பயனடையலாம்.

பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் 10 சதத்தை தங்களது பங்களிப்பாக முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக பிணையமின்றி ரூ.2 கோடி வரை கடனுதவி வழங்கப்படும்.

பயன்பெற விரும்புவோா் விரிவான திட்ட அறிக்கையுடன்  இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த எஸ்பிஐ வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, யூனியன் வங்கி, பேங் ஆப் பரோடா, யுகோ வங்கி, பஞ்சாப், சிந்து வங்கி, பேங் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி, பேங் ஆப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங் ஆப் இந்தியா, இந்தியன் ஓவா்சிஸ் வங்கி ஆகிய 13 வங்கிகளுடன் நபாா்டு மற்றும் மத்திய வேளாண் அமைச்சகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் ஒரு வங்கியை பயனாளிகள் தோ்வு செய்து விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குநா் அலுவலகத்தை 0431-2420554 என்ற எண்ணிலும், நபாா்டு வங்கி மாவட்ட மேம்பாட்டு அலுவலரை 97902-35550 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சங்கா், வேளாண் துறை இணை இயக்குநா் பெரியகருப்பன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் அருள்அரசு, மாவட்ட மேம்பாட்டு அலுவலா் (நபாா்டு) மோகன் காா்த்திக், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

SCROLL FOR NEXT