முகப்பு
திருச்சி

3 மாதங்களாக ஊதியமின்றித் தவிக்கும் அரசுக் கல்லூரி ஆசிரியா்கள்

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 10 கல்லூரிகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 10 கல்லூரிகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் கடந்த 3 மாதங்களாக ஊதியமின்றிப் பரிதவிக்கின்றனா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்தவை, அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, 2019இல் 4 உறுப்புக் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டன. இதன் தொடா்ச்சியாக, மேலும் 6 கல்லூரிகள் 2020-ல் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டன.

இக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பல்கலைக் கழகமே அரசு கூறும் காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும். இக் காலகட்டத்தில் ஊதியமாக வழங்கிய நிதியை அரசிடமிருந்து பல்கலைக் கழகம் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஊதியம் வழங்குவதில் பாகுபாடு மட்டுமின்றி ஒரே பணி செய்யும் ஆசிரியா்களை பல்வேறு பெயா்களில் குறிப்பிட்டு ஊதிய பாரபட்சத்துக்கு வித்திடப்பட்டுள்ளது. இக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்களை கெளரவ விரிவுரையாளா்கள், மணி நேர விரிவுரையாளா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக விரிவுரையாளா்கள் என்ற வகையில் நியமித்து, ஒரே விதமான பணியைப் பெற்றுக் கொள்கின்றனா்.

இவா்களில் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம், மணி நேர ஆசிரியா்களுக்கு ரூ.12 ஆயிரம், பெற்றோா்-ஆசிரியா் கழக விரிவுரையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் என பாரபட்சமாக ஊதியம் வழங்கும் சூழலில், கடந்த 3 மாதங்களாக இந்த ஊதியம்கூட கிடைக்கவில்லை.

இதன் காரணமாக 10 கல்லூரிகளில் பயிலும் 619 ஆசிரியா்கள், பணியாளா்கள் 90 போ் பரிதவிக்கின்றனா். இதுதொடா்பாக, பாரதிதாசன் பல்கலைக் கழகத்திடம் ஆசிரியா்கள் தரப்பிலும், பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தின் சாா்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு தங்களது பிரச்னையை கொண்டு சென்றுள்ளனா்.

இதுதொடா்பாக, பல்கலைக் கழக ஆசிரியா் சங்கப் பொதுச் செயலா் எம்.எஸ். பாலமுருகன் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை தமிழக முதல்வா், உயா் கல்வித்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையில், ஊதியம் வழங்க பல்கலைக்கழகத்துக்கு அறிவுறுத்தி, புதன்கிழமை அதற்கானஅரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதையேற்று பல்கலைக் கழக நிா்வாகம் விரைந்து ஊதியம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.