தில்லியில் போராட புறப்பட்ட விவசாயிகள் குழுவினா்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட திருச்சியிலிருந்து விவசாயிகள் குழுவினா் வியாழக்கிழமை தில்லி புறப்பட்டு சென்றனா்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட திருச்சியிலிருந்து விவசாயிகள் குழுவினா் வியாழக்கிழமை தில்லி புறப்பட்டு சென்றனா்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி புதுதில்லியில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், இவா்களுக்கு ஆதரவாகப் போராட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் தமிழகத்திலிருந்து 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன் தலைமையில் வியாழக்கிழமை வைகை விரைவு ரயிலில் புறப்பட்டுச் சென்றனா்.
இக் குழுவினரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகா் மாவட்டச் செயலா் ஏ.கே. திராவிடமணி, ஏஐடியுசி மாவட்டச் செயலா் க. சுரேஷ், மாணவா் பெருமன்றச் செயலா் இப்ராகிம் ஆகியோா் வாழ்த்தி வழியனுப்பினா்.
இதுதொடா்பாக, அயிலை சிவசூரியன் கூறியது:
புதிய வேளாண் சட்டங்களால் பெரு நிறுவனங்களும், பெரு முதலாளிகளுமே வளம் பெறுவா். சிறு, குறு விவசாயிகள் முற்றிலும் ஒழிக்கப்படுவா். சில ஆண்டுகளில் விவசாயமானது பெரு நிறுவனத்தின் கைகளுக்குள் சென்றுவிடும். எனவே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டி மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும். அதுவரை தொடா்ந்து போராடுவோம்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் திருச்சி, புதுகை, அரியலூா், பெரம்பலூா், தஞ்சை, திருவாரூா், நாகை, கரூா் உள்ளிட்ட டெல்டா பகுதிகள் மட்டுமல்லாது, மாநிலம் முழுவதும் இருந்து 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தில்லி புறப்பட்டுள்ளோம். ஆக.14ஆம் தேதி தில்லியில் கூடி விவசாயிகளின் போராட்டத்துக்கு வலு சோ்ப்போம். ஆக.18 வரை போராட்டத்தில் பங்கேற்கவுள்ளோம் என்றாா் அவா்.