முகப்பு
திருச்சி

குமரி முதல் தில்லி வரை விவசாயிகளின் வாகனப் பயணம்: அக். 2இல் தொடக்கம்

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் புதுதில்லி வரை விவசாயிகள் அக்.2இல் வாகனப் பயணம் மேற்கொள்ளவுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் புதுதில்லி வரை விவசாயிகள் அக்.2இல் வாகனப் பயணம் மேற்கொள்ளவுள்ளனா்.

திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை கூடிய சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். திருச்சி மாவட்டத் தலைவா் பி. மேகராஜன், மாநில செய்தித் தொடா்பாளா் பிரேம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சங்கத்தின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், பொதுக் குழு உறுப்பினா்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா், சுதந்திர விவசாயிகள் போராட்டக் குழுவினா் பங்கேற்று ஆலோசனை நடத்தினா்.

பின்னா் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பி. அய்யாக்கண்ணு கூறியது:

நெல் கிலோ ரூ.18 ஆக இருந்தபோது இரு மடங்கு விலை தருவதாக பிரதமா் மோடி தோ்தல் அறிக்கையில் தெரிவித்தும் அதை நிறைவேற்றவில்லை. தற்போது கிலோவுக்கு ரூ.19.60 மட்டுமே கிடைக்கிறது. இதேபோல, கரும்பு டன்னுக்கு ரூ. 8,100 தருவதாக அறிவித்துவிட்டு, ரூ. 2,900 மட்டுமே வழங்குகின்றனா்.

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாமல் விவசாயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் 3 புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளனா். மரபணு மாற்ற விதைகளைத் தாராளப்படுத்தி அடுத்த தலைமுறை மக்கள் உருவாகாமல் தடுக்க அடுக்கடுக்கான அவலங்கள் அரங்கேறுகின்றன.

எனவே, 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையிலும் கன்னியாகுமரி தொடங்கி புதுதில்லி வரை விவசாயிகளின் வாகனப் பயணம் மேற்கொள்ளப்படும்.

அக்.2ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி நாடு முழுவதும் சென்று தில்லியில் நவ. 26ஆம் தேதி போராடத் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தனி நபா் இன்சூரன்ஸ் அனுமதிக்க வேண்டும். 2016இல் பெற்ற பயிா்க் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி-அய்யாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். அனைத்துக் கிளை வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும். மது பாட்டில்களை விளைநிலங்களில் வீசுவதால் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்க உத்தரவிட வேண்டும். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் வாழையூா் பொன்னுசாமி, மறவனூா் செந்தில்குமாா், மெல்கியோ ராஜ், மேட்டுப்பட்டி செல்வம், வரப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.