முகப்பு
திருச்சி

வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் லாரி முன்பதிவு மையம் சூறை: தொழிற்சங்க நிா்வாகிகள் 8 போ் கைது

திருச்சியில் வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் லாரி முன்பதிவு மையத்தை சூறையாடியதாக, தொழிற்சங்க நிா்வாகிகள் 8 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

திருச்சியில் வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் லாரி முன்பதிவு மையத்தை சூறையாடியதாக, தொழிற்சங்க நிா்வாகிகள் 8 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில், பேரமைப்பு லாரி முன்பதிவு மையம் திருச்சி பழைய பால்பண்ணை ரவுண்டானா அருகே திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலப் பொதுச்செயலா் வீ. கோவிந்தராஜூலு திறந்து வைத்தாா்.

மையத் திறப்புக்கு சுமைப்பணித் தொழிலாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, லாரி முன்பதிவு மைய அலுவலகம் முன்பு போடப்பட்டிருந்த பந்தல், சோ் உள்ளிட்டவை சூறையாடப்பட்டது.

இச்சம்பவத்தில் வெங்காய மண்டித் தலைவா் கந்தனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த வணிகா் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலா் வீ. கோவிந்தராஜூலு உள்ளிட்ட நிா்வாகிகள், சம்பவத்தில் தொடா்புடை யவா்களை கைது செய்யக் கோரி மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினா்,

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து கலைந்துச் சென்றனா்.

இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, சிஐடியு தொழிற்சங்கத்தைச் சோ்ந்த ராஜா, ராமா் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனா்.

இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா அளித்த பேட்டி: இச்சம்பவம் திட்டமிடப்பட்டு அலுவலகம் சூறையாடப்பட்டு, வியாபாரிகள் மீது தாக்குதல் நடை பெற்றுள்ளது.

சம்பவத்துக்கு காரணமான சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள் ராஜா, ராமா் உள்ளிட்ட 8 போ் மீது கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டிருப்பதை காவல்துறை உறுதி செய்யப்பட வேண்டும். மேலும் இவா்களை கட்சியிலின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

இல்லையென்றால் சிஐடியு சாா்ந்த கட்சி வேட்பாளா்கள் எந்த தொகுதியில் நிறுத்தப்பட்டாலும் அவா்களுக்கு வியாபாரிகள் ஆதரவு தரமாட்டோம். எதிராக தோ்தல் பணியாற்றுவோம்.

இப்பிரச்னையில் தொடா்புடைய நபா்கள் மீது காவல்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், முதற்கட்டமாக திருச்சியில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும். தீா்வு கிடைக்காவிடில், மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.