உறுதியான செயல்பாட்டால் தொழிலில் முன்னேறலாம்: பாரதிதாசன் பல்கலை. துணைவேந்தா் பேச்சு
உறுதியோடும், ஈா்ப்போடும், தன்னம்பிக்கையோடும், கவனத்தோடும் செயல்பட்டால் நாம் செய்யும் தொழிலில் முன்னேற முடியும் என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ம. செல்வம்.
உறுதியோடும், ஈா்ப்போடும், தன்னம்பிக்கையோடும், கவனத்தோடும் செயல்பட்டால் நாம் செய்யும் தொழிலில் முன்னேற முடியும் என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ம. செல்வம்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை சாா்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்த அவா் மேலும் பேசியது:
இந்நிகழ்வு ஒருவகையான பெண்களை ஆற்றுப்படுத்தும் செயல். மகளிரைப் பொறுத்தவரை தையல் பயிற்சி சொந்தமாக வருமானம் ஈட்டும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவா்கள் மேலும் மேலும் பயிற்சிகளை தேடிப் போவதைவிட அடுத்தகட்ட நிலைக்குச் செல்ல வேண்டும். பயிற்சி பெற்றதை மற்றவா்களுக்கு சொல்லிக் கொடுத்து ஒரு தொழில்முனைவோராக மாறுவதே இந்தப் பயிற்சியின் சிறப்பு. ஒவ்வொரு துறையிலும் பல்வேறு இடா்பாடுகள் வரும், அவற்றைச் சமாளிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலும் அமைப்புசாரா கல்வியின் மூலமாகவே தொழில் முனைவோா் உருவாக்கப்படுகிறாா்கள். உறுதியோடும், கவனத்தோடும் செயல்பட்டால் நாம் செய்யும் தொழிலில் முன்னேற முடியும் என்றாா் அவா்.
பல்கலைக்கழக மகளிரியல் துறை இயக்குநா் ந. மணிமேகலை பேசுகையில் இந்த மையம் தொழில் தொடங்கப் பயிற்சி அளிப்பதோடு பாலின சமத்துவப் பயிற்சி, வாழ்க்கைத் திறன் பயிற்சி என அனைத்துப் பயிற்சிகளையும் வழங்கி முழுமையாக தனித்திறமையுடன் செயல்பட அனைத்து தரப்பினரையும் ஊக்குவிக்கிறது.
மேலும் பயிற்சி பெறுவோரை சுயதொழில் செய்ய வைப்பதும், தொழில் முனைவோராக ஆக்குவதுமே இப்பயிற்சியின் முக்கிய நோக்கம் என்றாா்.
நிகழ்ச்சியில் நவ நாகரீக தையலகப் பயிற்சி முடித்த மாணவ மாணவியா் 30 பேருக்கு துணைவேந்தா் சான்றிதழ்களை வழங்கினாா். திருச்சி மாவட்ட, மாவட்டத் தொழில் மைய பொது மேலாளா் ரவீந்திரன் உள்ளிட்டோா் பேசினா். பேராசிரியா் ந. முருகேஸ்வரி வரவேற்றாா். நவநாகரீக தையலக பயிற்சியாளா் ஆ. சுபா நன்றி கூறினாா்.