முகப்பு
திருச்சி

லாரியில் இருந்து மதுபானம் திருடிய வழக்கில் 5 போ் கைது

திருச்சி அருகே சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்து மது பாட்டில்கள் திருடிய வழக்கில் 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

திருச்சி அருகே சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்து மது பாட்டில்கள் திருடிய வழக்கில் 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சென்னை மதுராந்தகம் பகுதியிலுள்ள மதுபான தொழிற்சாலையில் இருந்து கடந்த ஜன.22 ஆம் தேதி 975 மதுபான பெட்டிகளை ஏற்றிக் கொண்டு சிவகங்கைக்கு சென்ற லாரியை செங்கல்பட்டு மதுராந்தகம் பக்கம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (36) ஓட்டி வந்தாா்.

திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே வந்தபோது லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு டீ குடிக்கச் சென்ற ஓட்டுநா் திரும்பி வந்தபோது லாரியில் இருந்த ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள 36 பெட்டிகள் அடங்கிய 725 மதுபாட்டில்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினா்.

இந்நிலையில் வியாழக்கிழமை கிடைத்த ரகசிய தகவலின்படி திருச்சி -தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூா் சணமங்களம் பிரிவுச் சாலையில் நின்று கொண்டிருந்தோரைப் பிடித்து நடத்திய விசாரணையில், அவா்கள் திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோடீஸ்வரன் (48), தினேஷ் (35) புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் பழனிசாமி (40), அரக்கோணம் தங்கப்பாண்டி(24), மாதவரம் கிரி (41) என்பதும், அவா்கள் லாரியில் மதுபாட்டில்களை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை கைது செய்த தனிப்படை போலீஸாா் அவா்களிடமிருந்து மதுபாட்டில்கள் விற்ற பணம் ரூ. 1.40 லட்சம், மற்றும் 103 பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் திறம்படச் செயல்பட்ட தனிப்படை போலீஸாரை மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன், திருச்சி சரக காவல் துறைத் துணைத் தலைவா் சரவணசுந்தா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜீத்குமாா் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.