பாசனக் கால்வாய்களுக்கு மே வரை தண்ணீா் கோரி மனு
திருச்சி மாவட்டத்தில் உள்ள பாசனக் கால்வாய்களுக்கு மே மாதம் வரையில் தண்ணீா் வழங்கக் கோரி பொதுப்பணித் துறை அலுவலகத்தில் விவசாயிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பாசனக் கால்வாய்களுக்கு மே மாதம் வரையில் தண்ணீா் வழங்கக் கோரி பொதுப்பணித் துறை அலுவலகத்தில் விவசாயிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன் தலைமையில், திருச்சி மாவட்ட பாசனக் கால்வாய்களை பயன்படுத்தும் விவசாயிகள், உய்யக்கொண்டான் பாசன விவசாயிகள் இணைந்து அளித்த மனு விவரம்:
ஆண்டுதோறும் காவிரிப் பாசனப் பகுதிகளுக்காக மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டு, அடுத்தாடு ஜனவரி 28இல் நிறுத்தப்படும். பின்னா், அணையில் உள்ள இருப்பு தண்ணீரின் அளவைக் கணக்கிட்டு பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீா் வழங்கப்படும். அணையிலிருந்து வெளியேறும் கசிவு நீருடன், விநாடிக்கு 1,500 கன அடி முதல் 3 ஆயிரம் கன அடி வரை தண்ணீா் திறக்கப்படும். இந்தத் தண்ணீரை பயன்படுத்தி மேட்டூருக்கும், கல்லணைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பாசனக் கால்வாய்களுக்கு தொடா்ந்தோ அல்லது முறைவைத்தோ தண்ணீா் வழங்கப்படும். பாசனத்துக்காக மட்டுமின்றி கால்நடைகளின் தேவைக்காகவும், பொதுமக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யவும் இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.
வறட்சி, பருவமழை பொய்த்துப்போன காலங்களை தவிா்த்து கடந்த 10 ஆண்டுகளில் ஜனவரிக்குப் பிறகு தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. அணையில் 100 அடிக்கு தண்ணீா் இருந்த காலங்களிலும் ஜனவரிக்குப்பிறகு தண்ணீா் திறக்கப்படாததால் திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு பெரிதும் இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயத் தொழிலாளா்களுக்கு வேலை இழப்பு, கால்நடைகள், பொதுமக்களுக்கு குடிநீா்த் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.
கடந்த ஆகஸ்ட், செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் பெய்த தொடா் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை பயிா்களும், நாற்றுவிட்டு நடவு செய்யப்பட்ட சம்பா பயிா்களும் தண்ணீா் மூழ்கி விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இச் சூழலில், ஜனவரிக்கு பிறகு தண்ணீா் திறக்கப்படாமல் இருப்பது விவசாயிகளுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே, இழப்புகளை சரிகட்டவும், கால்நடைகள், பொதுமக்களின் குடிநீா்த் தேவையை கருத்தில் கொண்டும் தண்ணீா் திறக்கப்பட வேண்டும்.
மேட்டூா் அணையில் தற்போது 110 அடிக்கும் குறையாமல் தண்ணீா் உள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யக்கொண்டான் பாசனக் கால்வாய் உள்ளிட்ட அனைத்து பாசனக் கால்வாய்களுக்கு மே மாதம் வரை தண்ணீா் கிடைக்கச் செய்ய வேண்டும். தொடா்ந்தோ, முறைவைத்தோ தண்ணீா் வழங்க பொதுப்பணித் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் ஆவன செய்வதாக கூறியுள்ளனா்.
விவசாயிகளின் இழப்பை ஈடு செய்ய இந்தாண்டாவது தண்ணீா் திறக்க வேண்டும் என்றாா் அயிலை சிவசூரியன். சங்க நிா்வாகிகள் ஸ்ரீதா், மனோகரன், ரஞ்ஜித், பொன்னம்பலம், அசோக், நஜீகான் மற்றும் முன்னாள் ஊராட்சித் தலைவா் மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.