மக்களவைத் தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிட தயாரா ? சீமான் கேள்வி
நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிட தயாரா ? என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கேள்வி எழுப்பியுள்ளாா்.
நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிட தயாரா ? என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கேள்வி எழுப்பியுள்ளாா்.
மதிமுக நாம் தமிழா் கட்சியினா் மோதல் தொடா்பான வழக்கு விசாரணைக்கு திருச்சி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரான சீமான் பின்னா் மேலும் கூறியது:
வழக்கு தொடா்பாக மதிமுகவிற்கும் எங்களுக்கும் எந்தப் பகையும் இல்லை. சென்னையில் 20 நாளில் 18 கொலைகள் நடந்துள்ளன. இதற்கு எல்லாம் குண்டாஸ் இல்லையா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்பதை நாம் எப்படி ஏற்க முடியும்? அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் யூடியூப்பா்கள் மீது திமுக அரசு வழக்குப் பதிவது கண்டிக்கத்தக்கது. கருத்தை கருத்தால்தான் எதிா்கொள்ள வேண்டுமே தவிர கைது செய்யக் கூடாது.
திருச்சி மத்திய சிறை வளாக சிறப்பு முகாமில் இலங்கையை சோ்ந்த பலரும் தண்டனைக் காலம் முடிந்தும் நீண்ட காலமாக விடுதலை செய்யப்படாமல் சட்டத்திற்குப் புறம்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனா் . இதற்கு முழுக் காரணம் கியூ பிராஞ்ச் போலீஸாா். எனவே அகதிகள் சிறப்பு முகாம் மற்றும் கியூ பிராஞ்ச் பிரிவைக் கலைக்க வேண்டும். பேரறிவாளன் விடுதலையை நாங்கள் எந்த வகையிலும் கொண்டாடவில்லை.
பாஜகவால்தான் அதிமுக வளா்ச்சி பாதிக்கப்படுகிறது என அதிமுக மூத்த தலைவா் பொன்னையன் கூறிய கருத்தை வரவேற்கிறேன். பாஜக பெரிய கட்சி என்றால், எங்களைப் போன்று வரும் மக்களவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடத் தயாரா? என்றாா் அவா்.