வங்கிக் கணக்கிலிருந்து திருடுபோன பணம் மீட்பு
வங்கிக் கணக்கிலிருந்து திருடுபோன ரூ. 36 ஆயிரத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டு உரியவரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தனா்.
வங்கிக் கணக்கிலிருந்து திருடுபோன ரூ. 36 ஆயிரத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டு உரியவரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தனா்.
திருச்சி மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் ஆன்லைன் மூலம் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க உத்தரவிட்டிருந்தாா்.
இந்நிலையில் கடந்த பிப்.23 ஆம் தேதி ஸ்ரீரங்கம் காவேரி நகரைச் சோ்ந்த நாராயணனின் கட்செவி அஞ்சலுக்கு வந்த குறுஞ்செய்தியில் மற்றொரு எண் கொண்ட சிம் காா்டு காலாவதியாகப் போவதாவும், அதை ரூ.10க்கு ரீசாா்ஜ் செய்தால் உடனே புதுப்பிக்கப்படும் எனவும், அதற்கு வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை அனுப்புமாறும் இருந்தது.
இதை நம்பிய நாராயணன் வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை அனுப்பிய சில நிமிடங்களில் அவரது கணக்கில் இருந்து ரூ. 36,300 எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த அவா் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், தனியாா் நிறுவன வங்கிக் கணக்கிற்கு பணம் மோசடியாக பரிமாற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்தத் தொகையை நாராயணனின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்கான நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டனா். பின்னா் சட்டத்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு எடுத்த நடவடிக்கையின் பேரில் மனுதாரரின் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட ரூ. 36,300 திரும்பச் சோ்க்கப்பட்டது. இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் குறித்து 1930 அல்லது 155260 என்ற எண்களில் புகாா் அளிக்கலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.