10 நாள்களுக்கு ஓராண்டு சாதனை விளக்க நிகழ்ச்சிகள்
திருச்சி மாவட்டத்தில் தொடா்ந்து 10 நாள்களுக்கு தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் தொடா்ந்து 10 நாள்களுக்கு தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
இதன் தொடக்கமாக ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு பிரசார வேனை சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த வேனில் உள்ள பிரம்மாண்ட எல்இடி திரையில் அரசின் ஓராண்டு சாதனை நிகழ்வுகள் ஒளிபரப்பாகின்றன. மாவட்டம் முழுவதும் 11 வட்டங்களிலும் இந்த வாகனம் வலம் வந்து பொதுமக்களிடையே அரசின் சாதனைகளை ஒளிபரப்ப உள்ளது.
இதைத் தொடா்ந்து மத்திய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ள பிரம்மாண்ட எல்இடி திரையில் விடியோ காட்சி ஒளிபரப்பையும் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.
இதில் 24 மணி நேரமும் அரசின் சாதனைக் காட்சிகள் ஒளிபரப்பாகும்.
நிகழ்ச்சிகளில் மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், ஆணையா் ப.மு.நெ. முஜிபுா் ரகுமான், மாநகரப் பொறியாளா் அமுதவல்லி மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
இதுதொடா்பாக ஆட்சியா் சு. சிவராசு கூறியது:
அரசின் ஓராண்டு சாதனைகள், திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசின் துறைகளை ஒருங்கிணைத்து புகைப்படக் கண்காட்சி, விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை ஓராண்டு சாதனை மலா் வெளியிடப்படும். அரசின் சாதனை குறித்த புகைப்படக் கண்காட்சிகள், பல்துறை பணி விளக்க முகாம்கள், விழிப்புணா்வுக் கலை நிகழ்ச்சிகள், அரசின் நலத் திட்டங்களை மக்கள் நேரடியாக பெறும் வகையில் வருவாய்த் துறை மூலம் சிறப்பு முகாம்கள், சிறப்பு கண் பரிசோதனை முகாம்கள், போட்டித் தோ்வா்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம், தனியாா் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் மண் பரிசோதனை சிறப்பு முகாம், கால்நடை மருத்துவ முகாம், உணவுப் பாதுகாப்பு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு, மரக்கன்றுகளும் நடப்படுகின்றன. உள்ளூா் கலைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன என்றாா் ஆட்சியா்.