சம்பா அறுவடை: 22 சதவீதம் ஈரப்பதம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
திருச்சி உள்ள டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை பணிகளுக்கு இடையே தொடரும் மழை காரணமாக 22 சதவீதம் ஈரப்பதம் கொண்ட
திருச்சி உள்ள டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை பணிகளுக்கு இடையே தொடரும் மழை காரணமாக 22 சதவீதம் ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
குறுவையில் அறுவடையாகும் நெல் அக்டோபா், நவம்பா் மாதங்களிலும், சம்பா பட்டத்தில் அறுவடையாகும் நெல் ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரையிலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் பெறப்படுகின்றன. நெல் உற்பத்தி அளவைப் பொறுத்து டெல்டா தவிர பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்க, அந்தந்த மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பரவலாக நடைபெற்றுள்ளது. மாவட்ட நிா்வாகத்தின் கணக்கெடுப்பின்படி டிசம்பா் மாதம் வரை 63 ஆயிரத்து 330 ஹெக்டோா் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், அறுவடைக்கு தயாராக 56 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் உள்ளது. இதற்கிடையே அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, முசிறி, தொட்டியம், தாத்தையங்காா் பேட்டை, துறையூா், உப்பிலியபுரம், லால்குடி, மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி ஆகிய 14 வட்டாரங்களிலும் பரவலாக விவசாயிகள் அறுவடையை தொடங்கியுள்ளனா். தற்போது, மழை காரணமாக அறுவடை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மழையில்லாத இடங்களில் அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தி வருகின்றனா்.
இதற்கிடையே மழை காரணமாக நெல் பயிா்கள் பல இடங்களில் சாய்ந்துள்ளன. ஏற்கெனவே அறுவடை செய்து திறந்த வெளியில், நெகழி உறையால் மூடப்பட்ட நெல்களும் ஈரத்தில் உள்ளன. காற்றின் ஈரப்பதமும் அதிகரித்துள்ளதால் நெல் மணிகள் பெரும்பாலும் கூடுதல் ஈரப்பதத்துடன் உள்ளது. 19 சதவீதம் வரை ஈரப்பதம் கொண்ட நெல் மணிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போதைய நிலையில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் கொண்ட நெல்மணிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
இது குறித்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக வட்டாரத்தினா் கூறியது, திருச்சி மாவட்டத்தில் சம்பா பயிா் கொள்முதலை கருத்தில் கொண்டு ஏற்கெனவே 68 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 30 இடங்களில் இம்மாத இறுதிக்குள் திறக்கப்படும்.
விவசாயிகளின் தேவைக்கேற்ப மொத்தம் 102 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் வரை திறக்கவும் தயாராகவுள்ளோம். விவசாயிகளிடம் எவ்வித கூடுதல் கட்டணங்களோ, கையூட்டோ வசூலிக்கக் கூடாது என கொள்முதல்நிலைய பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பபட்டுள்ளது. விவசாயிகளிடம் பெற்ற நெல்லுக்கு 3 நாள்களுக்குள் உரிய தொகை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரப்பதம் அளவை நிா்ணயம் செய்வதில் அரசிடமிருந்து பிரத்யேக வழிகாட்டுதல் வந்தால் மட்டுமே நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக ஈரப்பதம் கொண்ட நெல் கொள்முதல் செய்யப்படும் என்றனா்.
அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலித்தால்...
சம்பா அறுவடை பணிக்கான இயந்திரங்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் அந்தந்த வட்டாரங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியாா் நிறுவனங்களின் அறுவடை இயந்திரங்களுக்கு மாவட்ட நிா்வாகமே வாடகையை நிா்ணயம் செய்துள்ளது. அதன்படி, பெல்ட் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2,500, டயா் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு ரூ.1,700 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைவிட கூடுதலாக வாடகை வசூல் செய்தால், மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கிவரும் 93427 12122 என்ற கட்டணமில்லா எண்ணில் புகாா் செய்யலாம். அந்தந்த வட்டார செயற்பொறியாளா் அலுவலகத்திலும் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.