திருச்சி, ஆக. 15: திருச்சி ரயில்வே கோட்டம் 13.294 மில்லியன் பயணிகளைக் கையாண்டு ரூ. 177 கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தெரிவித்தாா்.
நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தையொட்டி திருச்சி ரயில்வே கோட்டம் சாா்பில் கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் தேசிய கொடியேற்றி அவா் மேலும் பேசியது:
திருச்சி ரயில்வே கோட்டம் கடந்த 01-04-2024 முதல் 31-07-2024 வரை 13.294 மில்லியன் பயணிகளைக் கையாண்டு, ரூ. 177.13 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்தாண்டின் இதே காலகட்டத்தை விட 8.20 சதவீதம் அதிகமாகும்.
இதேபோல, 4.723 மில்லியன் டன்கள் சரக்குகளை கையாண்டு, ரூ. 242.31 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. குறிப்பாக, கடந்த 133 நாள்களில் 5 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் டிக்கெட் பரிசோதனை வழியாக ரூ. 4.02 கோடி வருமானம் கிடைத்துள்ளது என்றாா் ரயில்வே கோட்ட மேலாளா்.
விழாவுக்கு முதுநிலை ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபிஷேக் தலைமை வகித்தாா். கூடுதல் கோட்ட மேலாளா் பி.கே. செல்வன், ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இதில் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் சாகசங்கள், மாணவா்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பங்கேற்றவா்களுக்கு கோட்ட மேலாளா் பரிசளித்தாா்.
பொன்மலையில்... : பொன்மலை ரயில்வே பணிமனை முதன்மை வாயில் எதிரே முதன்மை பணிமனை மேலாளா் சந்தோஷ் குமாா் பத்ரா தேசிய கொடியேற்றி, சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள், தொழிலாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிப் பேசினாா். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.