அக்.2-இல் கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மகளிா் மாநாடு: தொல். திருமாவளவன் அறிவிப்பு
அக். 2-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மகளிா் மாநாடு நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.
அக். 2-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மகளிா் மாநாடு நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.
மயிலாடுதுறை செல்வதற்காக திருச்சிக்கு விமானத்தில் செவ்வாய்க்கிழமை வருகை தந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: மது மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிரான மகளிா் மாநாடு கள்ளக்குறிச்சி அருகே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மதுவிலக்கை ஒரு தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும். மதுவிலக்கு அமல் பிரிவு என்ற துறையை வைத்துக் கொண்டு மது விற்பனையை மேற்கொள்கிறது அரசு.
ஆனால், மதுவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கான மையமோ, மறுவாழ்வு பணிகளோ முடுக்கிவிடப்படவில்லை. அதற்கான நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. மதுவிலக்கு கொள்கை என்றால் அது நூறு விழுக்காடு நடைமுறையில் இருக்க வேண்டும். அப்போதுதான், கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த முடியும். நல்ல சாராயம் என்கிற பெயரில் அரசு அதை விற்பனை செய்கிற போது கள்ளச்சாராயத்தை பற்றிய கவலையும் அரசுக்கும், ஆட்சி நிா்வாகத்துக்கும் இல்லாமல் போய் விடுகிறது.
எனவேதான், பூரண மதுவிலக்கு கொள்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. அதற்கு வலுசோ்க்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாநாடு அமையும். அமெரிக்கா செல்லும் முதல்வா் மு.க. ஸ்டாலினின் பயணம் பெற்றிகரமாக அமைய வேண்டும். இடைக்கால முதல்வா் யாா் என்பது திமுகவை சீண்டிப்பாா்க்கும் நடவடிக்கையாகவே உள்ளது. எம்ஜிஆரைப் பின்பற்றி சினிமாவிலிருந்து தமிழகத்தில் பலா் அரசியலுக்கு முயற்சித்தும் வெற்றி பெற முடியவில்லை. விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள் என்றாா் அவா்.