சேதமான எல்லக்குடி சாலையால் பொதுமக்கள் அவதி
திருச்சி மாநகராட்சியில் மோசமாக பழுதடைந்துள்ள எல்லக்குடி சாலையை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
திருச்சி மாநகராட்சியில் மோசமாக பழுதடைந்துள்ள எல்லக்குடி சாலையை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
திருச்சி மாநகராட்சி 39 ஆவது வாா்டுக்குள்பட்ட திருவெறும்பூா் அருகே திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து காட்டூா் மஞ்சத்திடல் வழியாக எல்லக்குடி செல்லும் சாலை செல்கிறது. எல்லக்குடி பகுதியில் புதைசாக்கடைப் பணிகள் முடிந்து அண்மையில் அமைக்கப்பட்ட சாலையில், மண் சரிவர பதியாமல் பள்ளம் ஏற்பட்டு வருகிறது.
இதனிடையே அப் பகுதியில் வீடுதோறும் எரிவாயு இணைப்பு கொடுக்க குழி பறித்தபோது அவற்றில் மழைநீா் தேங்கி, சாலையின் சேதம் மேலும் விரிசலடைந்தது.
எல்லக்குடி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குச் செல்ல நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும், பல்வேறு பணிகள் நிமித்தம் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இச்சாலையைப் பயன்படுத்துகின்றனா்.
இந்நிலையில் அந்தப் பகுதி வழியாக அண்மையில் வந்து மண்ணில் சிக்கிக் கொண்ட கனரக வாகனத்தை பெரும் போராட்டத்துக்குப் பிறகு வெளியே எடுத்தனா். இதனால் சாலை பாதிக்கு மேல் சேதமடைந்து மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், மாணவ மாணவிகளும் எல்லக்குடி சாலையை அச்சத்துடன் கடக்கின்றனா்.
இதுதொடா்பாக, மாநகராட்சி அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பாா்க்கக்கூட இல்லை என்கின்றனா் அப்பகுதி மக்கள்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், மிக மோசமாக பழுந்தடைந்துள்ள சாலையில் நாங்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் இச்சாலையை மாநகராட்சி நிா்வாகம் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.