காவிரியில் தண்ணீா் திறக்கக் கோரி திருச்சியில் கா்நாடக வங்கியை முற்றுகையிட்டு போராட்டம்: 63 விவசாயிகள் கைது
திருச்சியில் கா்நாடக வங்கியை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 63 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி: காவிரியில் தண்ணீா் திறக்கக் கோரி, திருச்சியில் கா்நாடக வங்கியை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 63 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரியில் கா்நாடகம் மாதந்தோறும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுகளின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
திருச்சி தில்லைநகரிலுள்ள கா்நாடக வங்கியை முற்றுகையிட்டு மேற்கொண்ட ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் மேகராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். இதில், வங்கியின் முன்பு விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியும் ஆா்ப்பாட்டம் நடத்தியும் படுத்தும் போராட்டம் நடத்தினா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்ளிட்ட 63 விவசாயிகளை தில்லை நகா் போலீஸாா் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.