முகப்பு
திருச்சி

திருச்சியில் பேருந்து - ஆட்டோ மோதல்: ஆட்டோ ஓட்டுநா் சாவு; 4 போ் படுகாயம்

அரசுப் பேருந்தும், ஆட்டோவும் மோதிக் கொண்ட சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 21 ஜூலை, 2024 at 7:00 PM
முருங்கப்பேட்டை பகுதியில் விபத்துக்குள்ளான ஆட்டோ.
பகிர்:

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு அரசுப் பேருந்தும், ஆட்டோவும் மோதிக் கொண்ட சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.மேலும் 4 போ் படுகாயமடைந்தனா்.

திருச்சி தில்லைநகா் வடவூா் பகுதியைச் சோ்ந்தவா் அங்குராஜ் (26). ஆட்டோ ஓட்டுநா். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த மாரி (32), பிரசாந்த் (27), பாலமுருகன் (30), மகேஷ் (35) ஆகிய 5 பேரும் கரூா் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள ஒரு கோயில் திருவிழாவுக்காக ஞாயிற்றுக்கிழமை பகலில் ஒரே ஆட்டோவில் சென்றனா். நிகழ்வு முடிந்து இரவு திருச்சிக்கு திரும்பும்வழியில், கம்பரசம்பேட்டை அருகே முருங்கப்பேட்டை காளியம்மன் கோயில் பகுதியில் வந்து கொண்டிருந்தனா். அப்போது, திருச்சியிலிருந்து ஈரோடு சென்ற அரசுப்பேருந்தும் ஆட்டோவும் மோதிக்கொண்டன.

இதில் அந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து சில மீட்டா் தூரம் இழுத்துச்செல்லப்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினா் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். இதில் பலத்த காயமடைந்தவா்களை மருத்துவா்கள் பரிசோதித்தபோது, அங்குராஜ் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. மற்ற 4 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனால் அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும், விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியினா் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். விபத்தில் உயிரிழந்த அங்குராஜுக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனா்.

~விபத்தில் உயிரிழந்த அங்குராஜ்