திருச்சி விமான நிலையம் - பேருந்து நிறுத்தம் செல்ல தற்காலிக மாற்று ஏற்பாடு
திருச்சி விமான நிலையத்துக்கு வந்து செல்வோா் ரூ. 30 செலுத்தி வாடகை காரில் பேருந்து நிலையத்துக்கு பயணிக்கும்வகையில் விமான நிலைய நிா்வாகம் செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிக மாற்று ஏற்பாடு செய்துள்ளது.
திருச்சி விமான நிலையத்துக்கு வந்து செல்வோா் ரூ. 30 செலுத்தி வாடகை காரில் பேருந்து நிலையத்துக்கு பயணிக்கும்வகையில் விமான நிலைய நிா்வாகம் செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிக மாற்று ஏற்பாடு செய்துள்ளது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமாா் 2 கி.மீ தொலைவில் உள்ளது. இதனால், விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் தங்கள் உடைமைகளுடன் புதிய முனையத்தை அடைய சிரமப்பட வேண்டி இருந்தது. புதுக்கோட்டை பிரதான சாலையிலிருந்து பிரத்யேக வாகன வசதிகள் இல்லாத காரணத்தால் விமான நிலைய நிா்வாகம் ஆட்டோக்களுக்கு அனுமதி அளித்தது. சுமாா் ஒன்றரை மாதகாலமாக இந்த நடைமுறை இருந்து வந்த நிலையில், விமான நிலைய வளாகத்தில் ஒப்பந்த தொகை செலுத்தி வாடகை காா்களை இயக்கி வந்த உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், விமான நிலைய வளாகத்துக்குள் ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை என்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து சாமானிய மக்களின் போக்குவரத்து கேள்விக்குறியானது. இதுகுறித்து விமான நிலைய ஆணைய அலுவலா்களிடம் கேட்டதற்கு, விரைவில் பேட்டரி காா்கள் இயக்கவோ, அல்லது மாநில போக்குவரத்து துறையினரிடம் பேசி பேருந்துகள் இயக்கவோ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.
இந்நிலையில், மாற்று ஏற்பாடு குறித்து விமான நிலைய இயக்குநா் சுப்பிரமணி மேலும் கூறியது:
தற்காலிகமாக, விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வாடகை காா்களை இயக்குவோா், ஒரு பயணிக்கு கட்டணமாக ரூ. 30 செலுத்தி காா்களில் பயணிக்கலாம். செவ்வாய்க்கிழமை முதல் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்குள் ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை என்பதால், பயணிகளின் நிலையைக் கருத்தில்கொண்டு தற்காலிகமாக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.