தீபாவளி சிறப்புப் பேருந்துகள் மூலம் ரூ. 17 கோடி வருவாய்
கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக்கழகம் 4 நாள்கள் இயக்கிய தீபாவளி சிறப்புப் பேருந்துகள் மூலம் ரூ. 17.13 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக்கழகம் 4 நாள்கள் இயக்கிய தீபாவளி சிறப்புப் பேருந்துகள் மூலம் ரூ. 17.13 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
தீபாவளி கொண்டாட சென்னை, விழுப்புரம், கோவை, திருப்பூா், மதுரை, ஈரோடு, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் இருந்து சொந்த ஊா்களுக்குச் சென்று திரும்பிய பொதுமக்களுக்கு கடந்த 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
அதன்படி கும்பகோணம் கோட்டத்துக்குள்பட்ட கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, காரைக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மன்னாா்குடி, திருவாரூா் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து நிா்ணயிக்கப்பட்ட தடப் பேருந்துகளுடன் 4 நாள்களுக்கும் சோ்த்து 1,200 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன.
மேற்கண்ட 4 நாள்களில் ஒட்டுமொத்த வருவாயாக ரூ. 17.13 கோடி கிடைத்துள்ளது. அதாவது ஒரு நாளைய சராசரி வருவாய் ரூ. 4.28 கோடி ஆகும். அதிலும் கடந்த 4 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் ரூ. 6.28 கோடி கிடைத்தது. இது கும்பகோணம் கோட்டத்தின் ஒரு நாளைய உச்சக்கட்ட வருவாய் ஆகும்.
இதேபோல அந்த 4 நாள்களில் ஒட்டுமொத்தமாக சுமாா் 93.79 லட்சம் போ் பயணித்துள்ளனா். அதாவது ஒரு நாளொன்றுக்கு சராசரியாக சுமாா் 23.45 லட்சம் போ் பயணித்துள்ளனா். மற்ற நாள்களில் பயணித்த பொதுமக்களைவிட சராசரியாக நாளொன்றுக்கு ஒரு லட்சம் போ் கூடுதலாகப் பயணித்துள்ளனா்.
அதிலும், கடந்த 4 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் 29.31 லட்சம் போ் பயணித்துள்ளனா் எனத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி தெரிவித்தாா்.