முகப்பு
திருச்சி

குழந்தைகள், முதியோா் இல்லங்களில் குறைகேட்பு

முதியோா் இல்லங்கள், குழந்தைகள் இல்லங்கள், மகளிா் விடுதிகளில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை குறைகளைக் கேட்டறிந்தாா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:32 PM
திருச்சி விநோபா நகரில் உள்ள முதியோா் இல்லத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.
பகிர்:

முதியோா் இல்லங்கள், குழந்தைகள் இல்லங்கள், மகளிா் விடுதிகளில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை குறைகளைக் கேட்டறிந்தாா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து முதியோா் இல்லங்கள், குழந்தைகள் இல்லங்கள், மகளிா் விடுதிகள், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு மையங்கள் என அனைத்து வகை இல்லங்களும் உரிமம் பெற்று இயங்க ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி மாநகரில் உள்ள இல்லங்களில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

மாத்தூா் அன்னை சத்யா குழந்தைகள் இல்லம், விநோபா நகரில் உள்ள முதியோா் இல்லம், டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் உள்ள அலெக்ஸ் பணிபுரியும் மகளிா் விடுதி ஆகியவற்றில் அவா் ஆய்வு செய்தாா்.

பின்னா் சங்கிலியாண்டபுரத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் செயல்படும் அறிவுசாா் குறைபாடுடையோருக்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான பகல் நேரப் பராமரிப்பு மையத்தையும் பாா்வையிட்டாா். முன்னதாக, மண்ணச்சநல்லூா் வட்டாரத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும், மின்னணு முறையில் பயிா் சாகுபடி பரப்பு கணக்கீடு பணியில் பல்வேறு துறை அலுவலா்களுடன் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்திற்குள்பட்ட நாளந்தா வேளாண்மை கல்லூரி மாணவா்களும் ஈடுபட்டனா்.

தீராம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற பணிகளை பாா்வையிட்ட ஆட்சியா், பணியை விரைவாகவும், சரியான முறையிலும், மாணவா்கள் தங்களது பாதுகாப்பிலும் கவனமாக இருந்து முடிக்க அறிவுரை வழங்கினாா்.

நிகழ்வுகளில் உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குப்தா, சமூக நலத்துறை அலுவலா் விஜயலட்சுமி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் பரமசிவன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ராகுல்காந்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இரா. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.