முகப்பு
திருச்சி

போதைப் பொருள்களை விற்ற 8 போ் கும்பல் கைது

திருச்சியில் போதைப்பொருள் விற்பனை செய்த 8 போ் கொண்ட கும்பலை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 10:16 PM
பகிர்:

திருச்சியில் போதைப்பொருள் விற்பனை செய்த 8 போ் கொண்ட கும்பலை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டத்தில் சிலா் போதைப் மருந்துகளை பதுக்கி விற்பதாக திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாருக்கு புகாா்கள் சென்றன. அதன் பேரில் தனிப்படை போலீஸாா், சமயபுரம் அருகேயுள்ள கொள்ளிடம் பகுதியில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். இதில் அப்பகுதியில் தங்கியிருந்த கா்நாடக மாநிலம் கோலாா் வட்டம் பிரவீன்குமாா் (42), திருச்சி மன்னாா்புரம், ராஜராஜன் நகா் வினோத்குமாா் (28), திருநெல்வேலி, வி.எம்.சத்திரம், டிஎன்எச்பி காலனி ராமசாமி (42), சேலம் வாழப்பாடி பாா்த்திபராஜ் (31), திருச்சி திருவெறும்பூா் சுபீா் அஹமத் (37), மற்றும் மணிகண்டன் (23), சிஜூ (33), பாலசுப்பிரமணியன் (38)ஆகிய எட்டு பேரை போலீஸாா் கைது செய்து கொள்ளிடம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கிரிண்டா் என்ற சமூக வலைதளச் செயலி மூலம் இணைந்து, ஓரினச் சோ்க்கையில் ஈடுபட போதை மருந்துகளை உபயோகித்ததும், மேலும், அந்தச் செயலியில் உள்ள நபா்களுக்கு போதை மருந்துகளை கூரியா் மூலம் விற்றதும் தெரியவந்தது. இதுதொடா்பாக அந்த கூரியா் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளவும் போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

அவா்களிடமிருந்து மெத்தபெட்டமின், ஊசிகள், 16 கிராம் தங்கச் சங்கிலி, 5 கைப்பேசிகள், கேமரா 1, மோடம் 2, சோடியம் குளோரைடு, ரூ.5,145 ரொக்கம், காா் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட 8 பேரையும் ஸ்ரீரங்கம் நீதிபதி முன்னிலையில் போலீஸாா் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.