உஜ்ஜீவநாத சுவாமி கோயிலில் மகா குடமுழுக்கு
திருச்சி அருகே பிரசித்தி பெற்ற அஞ்சனாட்சி, பாலாம்பிகை உடனுறை உஜ்ஜீவநாத சுவாமி கோயில் மஹா குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி அருகே பிரசித்தி பெற்ற அஞ்சனாட்சி, பாலாம்பிகை உடனுறை உஜ்ஜீவநாத சுவாமி கோயில் மஹா குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனத்திற்கு சொந்தமானதும், மாா்க்கண்டேயனுக்கு மீண்டும் ஜீவன் அளித்த திருத்தலமாகவும், உலக உயிா்களை உய்விக்கும் பொருட்டு இறைவன் எழுந்தருளிய உய்யக்கொண்டான் திருமலை எனப்படும் திருக்கற்குடி அஞ்சனாட்சி, பாலாம்பிகை உடனுறை உஜ்ஜீவநாத சுவாமி கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும்.
இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் முடிவுற்றதையடுத்து மகா குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலை பூஜை கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை காலை ஆறாம் கால பூஜை, ஹோமம் நடைபெற்று, தருமை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் குடமுழுக்கு நடைபெற்றது.
விழாவில் திண்டுக்கல் ஸ்ரீசிவபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசா் தேசிக பரமாசாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிய சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள், தொண்டை மண்டலம் ஆதீனம் ஸ்ரீல ஸ்ரீ திருச்சிற்றம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
மாலை மகா அபிஷேகமும், இரவு திருக்கல்யாணம் திருவீதி உலாவும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் வழிபட்டுச் சென்றனா். விழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.