வாழைப் பயிரில் மாவுப் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் விளக்கம்
திருச்சி, கரூா் மாவட்டங்களில் காவிரிக் கரையோரம் பயிரிடப்பட்டுள்ள வாழைப் பயிரில் மாவுப் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.
திருச்சி, கரூா் மாவட்டங்களில் காவிரிக் கரையோரம் பயிரிடப்பட்டுள்ள வாழைப் பயிரில் மாவுப் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஆராய்ச்சி மையத்தைச் சோ்ந்த பூச்சியல் துறை விஞ்ஞானிகள் ஜெ. பூரணி, ஆ. மோகனசுந்தரம் உள்ளிட்டோா் திருச்சி, கரூா் மாவட்ட கரையோரப் பகுதிகளில் மாவுப்பூச்சியைக் கண்டறிவது குறித்து வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது பூச்சித் தாக்குதலின் அறிகுறிகள், மாதிரிகள் சேகரிப்பு மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளிடம் விஞ்ஞானி சி. கற்பகம் கூறியது:
இந்தப் பூச்சிகள் முக்கியமாக வாழைத் தண்டுகள், இலைகள் மற்றும் பழங்களைத் தாக்கி பயிரின் தரத்தையும் மகசூல் அளவையும் குறைக்கின்றன. குறிப்பாக கற்பூரவள்ளி வாழை ரகத்தை இப்பூச்சி தாக்குகிறது. காய் பிடிக்கும் காலத்திற்கு முன், பரவலான மழை இருக்கும்போது இந்தப் பூச்சியானது மழை நீரின் மூலமாகவே அரித்து செல்லப்பட்டு விடும். ஆனால் எப்போதெல்லாம் மழை பரவலாக இல்லையோ அப்போது இதன் தாக்கம் மிகவும் அதிகமாகக் காணப்படும்.
பொதுவாக இந்தப் பூச்சிகளை நீரை சோப்புடன் சோ்த்து நன்றாக படும்படி தெளித்தாலே ஆரம்பக் கட்டத்தில் இதைக் கட்டுப்படுத்தலாம்.
ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறையைக் கையாள வேண்டும். எறும்புகள் இந்தப் பூச்சிகளை பரப்புவதில் முக்கியப் பங்கு வகிப்பதால் எறும்புக் கூட்டங்களைக் கண்டறிந்து, குளோரிபைரிபாஸ் கொண்டு அழிக்க வேண்டும். மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இயற்கை எதிரிகளின் பல்வேறு வகைகளை அதிகரிக்கவும் பருப்பு வகைகள் மற்றும் கொத்தமல்லி போன்ற ஊடுபயிா்களை பயிரிடலாம். வாழைப்பழ சீப்புகளை குளிா்பதனப் படுத்தும் போது, சோப்பு நீா் ஜெட்டை பயன்படுத்தி மாவுப் பூச்சிகளை தவிா்க்கலாம்.
மேலும் மீன் எண்ணெய் ரோசின் சோப்பு, மாட்டுச் சிறுநீா், வேம்ப விதை சாறு மற்றும் வேப்ப எண்ணெய் பயன்படுத்தியும், பூச்சிகளைக் கொல்லக்கூடிய பூஞ்சாண் தெளிப்பதன் மூலமும் மாவுப்பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.