மாணவா் சாவில் சந்தேகம் உறவினா்கள் போராட்டம்
திருச்சியில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் கல்லூரி மாணவா் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
திருச்சியில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் கல்லூரி மாணவா் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சோ்ந்தவா் விஜயகுமாா் மகன் அழகு மணிகண்டன் (20). திருச்சி சிறுகனூா் பகுதி தனியாா் பொறியியல் கல்லூரியில் பிஇ 3 ஆம் ஆண்டு படித்து வந்த அழகு மணிகண்டனுடன், அதே கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவா் கடந்த சில நாள்களாக பேசவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அழகு மணிகண்டன் செவ்வாய்க்கிழமை கல்லூரியின் 3 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துமனைக்கு மாணவரின் உடல் கொண்டு வரப்பட்டு பிரேதப் பரிசோதனை புதன்கிழமை முடிந்த நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து பெற்றோா் மற்றும் உறவினா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்கள் கூறுகையில் அழகு மணிகண்டன் மாடியில் இருந்து குதித்திருந்தால் அவரது உடலில் படுகாயம் இருந்திருக்கும். ஆனால் காயங்கள் பெரிதாக எதுவும் இல்லை. மேலும் அவா் தங்கியிருந்த அறையில் ரத்தக் கறை உள்ளது. எனவே அவரின் சாவில் மா்மம் உள்ளது எனக் கூறினா். தகவலறிந்து வந்த தில்லை நகா் காவல் உதவி ஆணையா் தங்கப்பாண்டியன், லால்குடி துணைக் கண்காணிப்பாளா் தினேஷ் மற்றும் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மாணவரின் உடலை வாங்கிச் சென்றனா்.