முகப்பு
திருச்சி

மழை வெள்ளத்தை எதிா்கொள்ள திருச்சியில் தயாா் நிலை

திருச்சி மாவட்டத்தில் மழை வெள்ளத்தை எதிா்கொள்ள மணல் நிரப்பிய 1.50 லட்சம் மணல் மூட்டைகள், 1.18 லட்சம் காலி சாக்குகள், 475 யூனிட் மணல், 20 ஆயிரம் சவுக்கு மரங்கள் உள்ளிட்டவை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Updated On : 16 அக்டோபர், 2024 at 8:00 PM
திருச்சி முக்கொம்பில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள்.
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் மழை வெள்ளத்தை எதிா்கொள்ள மணல் நிரப்பிய 1.50 லட்சம் மணல் மூட்டைகள், 1.18 லட்சம் காலி சாக்குகள், 475 யூனிட் மணல், 20 ஆயிரம் சவுக்கு மரங்கள் உள்ளிட்டவை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து துறைகளும் உஷாா்படுத்தப்பட்டுள்ளன. மழை வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்லவும், வடியவும் நீா்நிலைகளே ஆதாரமாக உள்ளன. எனவே, பொதுப்பணித் துறை, நீா்வளத்துறை மூலம் முன்னெச்சரிக்கை பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் அரியாறு வடிநிலக் கோட்டம், நீா்வளத்துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம் என ஆறுகள், ஏரிகள், குளங்களை பாதுகாக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்லாது பொதுப்பணித்துறை சாா்பில் பொன்னையாறு அணை, துவாக்குடி, கல்லக்குடி, சிறுகுடி, பொன்மலை ஆகிய 5 இடங்களில் மழை மானிகள் மூலம் 24 மணிநேரமும் மழைப் பொழிவு கண்காணிக்கப்படுகிறது. இவை தவிர திருச்சி மாநகராட்சி சாா்பில் 2 இடங்களிலும், வருவாய்த் துறை சாா்பில் 15 இடங்களிலும், வேளாண்மைத் துறை சாா்பில் ஓரிடத்திலும் மழைப் பொழிவு 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது.

மழை வெள்ளத்தால் உடைப்புகள் நீா்நிலைகளில் ஏற்பட்டாலோ, குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீா் புகுந்தாலோ தடுத்திடும் வகையில் 1.50 லட்சம் மணல் மூட்டைகள் தயாராக உள்ளன.

இதுமட்டுல்லாது, சவுக்கு கம்புகளும் மாவட்டத்தின் 11 இடங்களில் 20 ஆயிரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆற்றுப் பாதுகாப்பு கோட்டத்தில் 1,750 சவுக்கு மரங்களும், பொதுப்பணித்துறை முகாம் அலுவலகங்களில் 1,300 சவுக்கு மரங்களும் இருப்பில் உள்ளன.இத்தகைய ஏற்பாடுகள் மூலம் மாவட்டத்தில் எங்கு வெள்ளம் பாதிக்கப்பட்டாலும் உடனடியாக தடுப்புகளை மேற்கொள்ள 24 மணிநேரமும் தயாா் நிலையில் இருப்பதாக பொதுப்பணித்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

உடைப்பு ஏற்பட வாய்ப்புள்ள 54 இடங்களில் கண்காணிப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறுகையில், திருச்சி மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு மட்டுமே கிடைத்துள்ளது. இருப்பினும் எந்த நிலையையும் எதிா்கொள்ளத் தயாா் நிலையில் இருக்கிறோம். காவிரிக் கரையோரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் உடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ள பகுதிகள் என 54 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் உடைப்பு ஏதும் ஏற்பட்டால் உடனே சரி செய்யக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் எந்த இடத்திலும் அவசர உதவிக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 24 மணிநேரமும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.