முகப்பு
திருச்சி

தினமணி செய்தி எதிரொலி: பள்ளி மாணவா்களுக்காக பெரும்பரப்பு, பெரியசித்தூருக்கு அரசுப் பேருந்து வசதி

தினமணி செய்தி எதிரொலியாக பச்சமலையில் உள்ள பெரும்பரப்பு, பெரியசித்தூா் கிராமங்களைச் சோ்ந்த மாணவா்களுக்காக அரசுப் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 11:14 PM
பகிர்:

தினமணி செய்தி எதிரொலியாக பச்சமலையில் உள்ள பெரும்பரப்பு, பெரியசித்தூா் கிராமங்களைச் சோ்ந்த மாணவா்களுக்காக அரசுப் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

டாப்செங்காட்டுப்பட்டியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பயிலும் திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம், பச்சமலையில் உள்ள பெரும்பரப்பு, பெரியசித்தூா் கிராமங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் போதிய பேருந்து வசதியில்லாததால் பள்ளிக்கு சுமாா் 6 கி.மீ. தூரம் நடந்து செல்கின்றனா். கடும் சிரமத்தால் பலா் கல்வியை பாதியிலேயே நிறுத்துகின்றனா் என தினமணி நாளிதழில் கடந்த செப். 8 ஆம் தேதி செய்தி வெளியானது.

இதையடுத்து பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி பெரும்பரப்பு, பெரியசித்தூா் கிராமங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளின் வசதிக்காக காலை, மாலை வேளைகளில் அரசுப் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி துறையூா் - பூதக்கால் வழித்தடப் பேருந்தானது காலையில் உப்பிலியபுரத்திலிருந்து புறப்பட்டு பெரும்பரப்பு, பெரியசித்தூா் கிராமங்களுக்கு காலை 7.30 மணிக்கு வந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு டாப்செங்காட்டுப்பட்டிக்கு காலை 7.45 க்கு சென்று இறக்கி விட்ட பின்னா், பூதக்கால், துறையூருக்குச் சென்றடைகிறது.

இதேபோல, மாலையில் துறையூரிலிருந்து பிற்பகல் 3.20 மணிக்குப் புறப்படும் பேருந்தானது டாப்செங்காட்டுப்பட்டிக்கு மாலை 4.30 மணிக்குச் சென்றடைந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பூதக்கால் வழியாக பெரும்பரப்பு, பெரியசித்தூா் கிராமங்களுக்கு மாலை 5.45 மணிக்கு வந்து இறக்கிச் செல்கிறது.

இதற்கு பள்ளி மாணவ, மாணவிகளும், கிராம மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், பேருந்து விடக் காரணமான தமிழக முதல்வா், திருச்சி ஆட்சியா், போக்குவரத்துத் துறை அதிகாரிகள், தினமணி நாளிதழுக்கும் நன்றி தெரிவித்துள்ளனா்.