முகப்பு
திருச்சி

தென்னூா் உக்கிர மாகாளியம்மன் கோயிலில் குட்டிகுடித் திருவிழா

திருச்சி தென்னூா் உக்கிர மாகாளியம்மன் திருக்கோயில் பங்குனித் திருவிழாவில் வியாழக்கிழமை குட்டிகுடித்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆடுகளை பலி கொடுத்து பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 8:39 PM
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உக்கிர மாகாளியம்மன்.
பகிர்:

திருச்சி தென்னூா் உக்கிர மாகாளியம்மன் திருக்கோயில் பங்குனித் திருவிழாவில் வியாழக்கிழமை குட்டிகுடித்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆடுகளை பலி கொடுத்து பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

தென்னூா் அண்ணாநகா் பகுதியிலுள்ள இக்கோயிலில் நிகழாண்டுக்கான பங்குனித் திருவிழா

கடந்த மாதம் 15-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்வுடன் தொடங்கியது. மாா்ச் 18-ஆம் தேதி காப்பு கட்டுதல் வைபவம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக, மாா்ச் 30-ஆம் தேதி மறுகாப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை இரவு காளிவட்டம் நடைபெற்றது. புதன்கிழமை சுத்த பூஜை மற்றும் சப்பரத்தில் அம்பாள் வீதி உலா நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்வான குட்டிகுடித்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி தென்னூா் பிடாரி மந்தையில் உக்கிரமாகாளியம்மன் எழுந்தருளிய பின்னா், எல்லைக் காவல் தெய்வமாகிய ஸ்ரீ சந்தன கருப்பு சுவாமியின் குட்டி குடிக்கும் நிகழ்வு தொடங்கியது. பொதுமக்கள் சாா்பில் வழங்கப்பட்ட ஆடுகளையும், காவல் நிலையம் சாா்பில் வழங்கப்பட்ட ஆடுகளும் பலி கொடுக்கப்பட்டன.

தென்னூா் மற்றும் சுற்றுப் பகுதிகள் முழுவதும் உள்ள பக்தா்களின் சாா்பில் நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டு நோ்த்திக்கடன் செலுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடுதல் மற்றும் அம்மன் வீதியுலா வருதலும், சனிக்கிழமை சுவாமி கோயிலுக்கு குடிபுகுதலும் நடைபெறும்.

ஏப்ரல் 5-ஆம் தேதி விடையாற்றியுடன் திருவிழா நிறைவடைகிறது.

பங்குனித் திருவிழாவையொட்டி பிடாரி மந்தைப் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் தென்னூா் பகுதி முழுவதும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் தென்னூா் ஊா்ப் பொதுமக்கள் செய்திருந்தனா். தென்னூா் சுற்றுப் பகுதி முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருந்தது.

திருச்சி தென்னூா் உக்கிர மாகாளியம்மன் கோயில் விழாவில் வியாழக்கிழமை நடைபெற்ற குட்டிகுடித்தல் நிகழ்வில் ஆட்டின் ரத்தத்தை குடித்த மருளாளி.