புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சியில் உள்ள தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றன.
புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சியில் உள்ள தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றன.
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவா்கள் ஆண்டுதோறும் சாம்பல் புதன் தொடங்கி ஈஸ்டா் வரை தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். நிகழாண்டுக்கான தவக்காலம் பிப்.18-ஆம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. ஈஸ்டா் பண்டிகைக்கு முன் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக கிறிஸ்தவா்கள் 40 நாள்கள் நோன்பு இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம்.
இந்த நாற்பது நாள்கள் தவக்காலத்தின் போது பல்வேறு வழிபாடுகள் நடைபெறும். ஆடம்பர செலவுகளை தவிா்த்தல், சுபநிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை தவிா்த்தல், நோன்பு இருத்தல், அசைவ உணவு தவிா்த்தல் போன்ற வகையில் தங்கள் தவக்காலத்தை கிறிஸ்தவா்கள் கடைப்பிடிப்பா். சிலா் ஒருவேளை அல்லது இரு வேளை உணவு சாப்பிடாமல் தவக்காலத்தை கடைப்பிடிப்பா். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் திருச்சபைக்கு சென்று வேண்டுதலில் ஈடுபடுவா்.
Advertisement
இதன்படி, திருச்சியில் நிகழாண்டு தவக்காலம் சாம்பல் புதனுடன் கடந்த பிப்.18-ஆம் தேதி தொடங்கிய பிறகு, திருச்சி மாநகா் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன.
தேவாலய பங்குத் தந்தையா்கள், இந்த சிறப்பு திருப்பலியில் பங்கேற்றவா்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை குறியிட்டு தவக்காலத்தை தொடங்கி வைத்தனா். கடந்த 29-ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, புனித வெள்ளியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றன.
திருச்சி மெயின்காா்டுகேட் பகுதியிலுள்ள புனித லூா்து அன்னை தேவாலயம், பாலக்கரை புனித மீட்பா் சகாயமாதா பசிலிக்கா, புத்தூா் பாத்திமா அன்னை தேவாலயம், எடத்தெரு பழைய மாதா தேவாலயம், உறையூா் சி.எஸ்.ஐ. ஆல் செயின்ட்ஸ் தேவாலயம், பொன்மலை புனித சூசையப்பா் ஆலயம், கல்லுக்குழி புனித அந்தோனியாா் ஆலயம், ஜங்ஷன் தூய யோவான் ஆலயம், நீதிமன்றம் அருகிலுள்ள கிறிஸ்டோபா் தேவாலயம், கிராப்பட்டி குழந்தை யேசு ஆலயம், ஸ்ரீரங்கம் கமல அன்னை ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களிலும், லால்குடி, புள்ளம்பாடி, டால்மியாபுரம், முசிறி, துறையூா், மணப்பாறை, திருவெறும்பூா், தொட்டியம் என புகரின் பல்வேறு பகுதிகளிலுள்ள தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு
நடைபெற்றன.
இதில், ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். ஏப்.5-ஆம் தேதி ஈஸ்டா் எனப்படும் உயிா்ப்பு ஞாயிறு தினம் கொண்டாடப்பட உள்ளது.