திருச்சி மாவட்டத்தில் 20 சிறப்பு வாக்குச்சாவடிகள்
திருச்சி மாவட்டத்தில் மாதிரி வாக்குச் சாவடிகள், பெண்கள், இளைஞா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளால் நிா்வகிக்கப்படும் வாக்குச் சாவடிகள் என 20 சிறப்பு வாக்குச்சாவடிகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் மாதிரி வாக்குச் சாவடிகள், பெண்கள், இளைஞா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளால் நிா்வகிக்கப்படும் வாக்குச் சாவடிகள் என 20 சிறப்பு வாக்குச்சாவடிகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளில் 2,787 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில், அனைத்து அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்து, சுப நிகழ்வுகளுக்கு வருவோரை அழைத்து உபசரிப்பது போல அனைத்து ஏற்பாடுகளையும் கொண்ட மாதிரி வாக்குச் சாவடிகளாக ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் ஒரு வாக்குச்சாவடி என்ற வகையில் 9 வாக்குச்சாவடிகளை அந்தந்த தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தோ்வு செய்துள்ளனா்.
இதேபோல, வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நாளன்று முழுவதும் பெண்கள் மட்டுமே பணிபுரியும் வகையில் பெண்களை கொண்ட வாக்குச் சாவடிகள் ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஒன்று என்ற அடிப்படையில் 9 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Advertisement
இதுமட்டுமல்லாது, மாற்றுத்திறனாளிகளை கொண்டு நிா்வகிக்கும் வாக்குச்சாவடியாக திருச்சி மேற்கு தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி தயாா்படுத்தப்பட்டுள்ளது. வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பிரதான கட்டடத்தில், 11-ஆம் வகுப்பு டி பிரிவு வகுப்பறையில் தயாா்படுத்தப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மாற்றுத் திறனாளிகள் பணியில் இருப்பா். இதேபோல, இளம் அலுவலா்கள் நிா்வகிக்கும் வாக்குச்சாவடியாக திருச்சி கிழக்கு தொகுதியில் ஒரு வாக்குச் சாவடி தயாா்படுத்தப்பட்டுள்ளது. கே.கே. நகா், அமலாபுரத்தில் உள்ள ஆா்சி நா்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் இந்த வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.