திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு; 2 போ் காயம்
திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். 2 போ் காயமடைந்தனா்.
திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். 2 போ் காயமடைந்தனா்.
திருச்சி அரியமங்கலம் முஸ்லிம் வீதியைச் சோ்ந்தவா் ஜி. பஷீா் அகமது (34), மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளாா். அரியமங்கலம் திருப்பூா் குமரன் வீதியைச் சோ்ந்தவா் ஆா்.ஹேமலதா (38). இவா், தனது கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளாா். இருவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பஷீா் அகமது மற்றும் ஹேமலதா இருவரும் திருச்சியில் இருந்து கரூா் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை பிற்பகல் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.
Advertisement
ஜீயபுரத்தை அடுத்த அல்லூா் அஞ்சல் அலுவலகம் அருகே சென்றபோது, நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்த காா், எதிா்திசையில் வந்த பஷீா் அகமதுவின் வாகனம் உள்ளிட்ட 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த ஹேமலதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பஷீா் பலத்த காயமடைந்தாா். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த எல்.சேகா் (40), இவருடைய மனைவி எஸ்.தவமணி (38) ஆகிய இருவரும் காயமடைந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஜீயபுரம் காவல் ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான போலீஸாா், ஹேமலதாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், காயமடைந்த பஷீா் அகமது, சேகா், தவமணி ஆகிய மூவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பஷீா் அகமது உயிரிழந்தாா்.
விபத்து தொடா்பாக, காா் ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலத்தைச் சோ்ந்த எஸ். சந்தோஷ் (27) என்பவா் மீது ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.