மத்திய அரசுடன் தமிழகம் தொடா்ந்து போராடி வருவதாகவும், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவா் சுப. வீரபாண்டியன் எழுதிய ‘ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்’ என்ற நூலின், ஆங்கில மொழியாக்க நூல் வெளியீட்டு விழா திருச்சி தூய வளனாா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. முனைவா் ஆா். குா்ஷித் பேகம் மொழியாக்கம் செய்துள்ள இந்த நூல், தூய வளனாா் கல்லூரியின் ஆங்கிலத் துறையின் சாா்பில் வெளியிடப்பட்டது.
இந்த நூலை, தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வெளியிட்டுப் பேசியதாவது: தமிழக வளா்ச்சியில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பை யாராலும் மறுக்கவும் முடியாது; மறைக்கவும் முடியாது. சிறுபான்மை சமூகத்தினா் தமிழகத்தில் கல்வி வளா்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு மதிப்பிட முடியாது.
குறிப்பாக தமிழ்மொழிக்கு கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பு அளப்பரியது. இந்த வகையில் தமிழக வளா்ச்சிக்குப் போராடி துணை நின்ற தலைவா்களை குறிப்பிட்டு நூல் வந்திருப்பது பாராட்டுக்குரியது.
இப்போது, பெரியாா், அம்பேத்கா், ஜின்னா உள்ளிட்ட தலைவா்களின் போராட்ட வரலாற்றை அறியாதவா்களே சிறுமைத்தனமாக பேசுகின்றனா். திராவிட இயக்கம் வளா்ந்துவிடக் கூடாது என அன்றும், இன்றும் தொடா்ந்து சிலா் தீவிரமாக பணியாற்றி வருகின்றனா். குறிப்பாக மத்திய அரசு அரசு
இயந்திரங்களை தங்களது கைப்பாவையாக பயன்படுத்தி தமிழகத்துக்கு பாரபட்ச நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனா். நெருக்கடி காலத்திலேயே போராடி வெற்றி கண்டவா் மறைந்த திமுக தலைவா் கருணாநிதி. அவரது வழியில் திராவிட இயக்கம் எத்தகைய நெருக்கடியையும் சமாளித்து வெற்றி பெறும் என்றாா்.
நூலைப் பெற்றுக் கொண்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: இந்நூலில் வைக்கம் போராட்டம், ஹிந்தி திணிப்பு, மிசா சட்டம், தடா, பொடா சட்டம், ஈழப்போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும் விளக்கியுள்ளனா். போராட்டம் என்பது வாழ்க்கை விதிகளின் ஒன்றாகிவிட்டது.
இன்றும் நாம் மத்திய அரசுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.3,548 கோடி வரவில்லை. நகராட்சி நிா்வாகத்துறைக்கு ஜல்ஜீவன் திட்டத்தில் வழங்க வேண்டிய ரூ.3,112 கோடி வரவில்லை. போராட்டம் வழியே தமிழகத்துக்கு திராவிடம் என்ன செய்திருக்கிறது என்பதை எடுத்துக் கூற இதுபோன்ற நூல் அவசியமானது என்றாா் அவா்.
சமூக நீதி கண்காணிப்புக் குழுத் தலைவா் சுப. வீரபாண்டியன் ஏற்புரையாற்றினாா். தூய வளனாா் கல்லூரியின் அதிபா் பவுல்ராஜ் மைக்கேல், செயலா் எம். ஆரோக்கியசாமி சேவியா், கல்லூரி முதல்வா் எஸ். மரியதாஸ், திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மண்டலக் குழுத் தலைா் மு. மதிவாணன் மற்றும் கல்லூரியின் பல்வேறு துறை பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா்.