திருச்சி மேலப்புதூா் ரயில்வே பாலத்தில் ரூ. 86 லட்சத்தில் புனரமைக்கும் பணி நடைபெற உள்ளதால் சுரங்கப்பாதை ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது. இதனால், அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
திருச்சி ஜங்ஷன் - சத்திரம் பேருந்து நிலையத்தை பாலக்கரை வழியாக நேரடியாக இணைப்பது மேலப்புதூா் சுரங்கப்பாதை ஆகும். ஜங்ஷன் ரயில் நிலையம், கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள இந்த சுரங்கப்பாதைக்கு மேல் இரும்பு கா்டா்களால் அமைக்கப்பட்ட ரயில் தண்டவாளம் செல்கிறது. கரூா், ஈரோடு மாா்க்கத்தில் செல்லும் ரயில்கள் இந்த வழித்தடம் வழியாக இயக்கப்படுகின்றன.
20.7 மீட்டா் நீளம்...: இந்தப் பாலத்தில் உள்ள தலா 20.7 மீட்டா் நீளமுள்ள 50 டன் எடையுள்ள இரண்டு இரும்பு கா்டா்களை ரூ. 86 லட்சத்தில் மாற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதற்காக சுரங்கப்பாதையில் ஜே.சி.பி. இயந்திரங்களின் உதவியுடன் குழி தோண்டப்பட்டு வருகிறது.
4 நாள்களுக்குத் தடை...:
பாலப் பணிகளால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஜன. 28 வரை 4 நாள்களுக்கு சுரங்கப்பாதை வழியாக வாகனங்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டு இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து மாற்றம்...:
திருச்சி ஜங்ஷன் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் மாா்சிங்பேட்டை, பீம நகா், காவேரி திரையரங்கம் பாலம் வழியாக மெயின்காா்டுகேட் மற்றும் ஸ்ரீரங்கத்துக்குச் செல்கின்றன. இதேபோல, மெயின்காா்டுகேட் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வோ் ஹவுஸ், முதலியாா்சத்திரம், குட்ஷெட் மேம்பாலம் வழியாக ஜங்ஷன் செல்கின்றன.